புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் இண்டியா கூட்டணி கட்சியினர் நேற்று (நவ.1) பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனால் ரூ.10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக டெல்லி வணிகர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் இருந்து ராம்லீலா மைதானத்துக்கு பேரணியாக சென்றனர். இதையடுத்து ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இண்டியா கூட்டணியின் பேரணியால் வணிகர்களுக்கு வர்த்தம் பாதிக்கப்பட்டதாக வணிக மற்றும் தொழில் சபையின் தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“இண்டியா கூட்டணி கட்சிகளின் நேற்றைய பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தால் ராம்லீலா மைதானம் மற்றும் அதையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு சந்தைகள் பாதிக்கப்பட்டன. இதில் மட்டும் சுமார் 3 லட்சம் அங்காடிகள் உள்ளன. அதில் சுமார் 80 சதவீத அங்காடிகள் அடைக்கப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
தீபாவளி வர்த்தகம் இதனால் பாதிக்கப்பட்டது. சரக்கு போக்குவரத்து முடங்கியது. அங்காடிகள் செயல்பட்ட சில இடங்களிலும் வாடிக்கையாளர்களின் வருகை வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ரூ.10,000 கோடி (தோராயமாக) மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ‘இந்த இழப்பை ஈடு செய்வது யார்?’ என்ற கேள்வி எழுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
இண்டியா கூட்டணி பேரணி, பொதுக்கூட்டம்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணி சார்பில் நவம்பர் 1-ம் தேதி டெல்லியில் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி நேற்று மதியம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் திறந்த வேனில் கன்னாட்பிளேஸில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். பின்னர் ராம்லீலா மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது
இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், கர்நாடக முதல்வர் சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ராம்லீலா மைதானத்தில் குவிந்தனர்.
இந்த பேரணி, பொதுக்கூட்டம் இப்போது வேண்டாம் என்று டெல்லியை சேர்ந்த வணிகர்கள் தெரிவித்திருந்தனர். இருப்பினும் இண்டியா கூட்டணி கட்சியினர் திட்டமிட்டபடி தங்களது பேரணி, பொதுக்கூட்டத்தை நடத்தினர்.