

புதுடெல்லி: டெல்லியின் கிழக்கு ஷாலிமர் பாக் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சிம்ரன் (38). அவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், ஆயுத கடத்தல் உட்பட 23 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சூழலில் கடந்த ஜனவரியில் ஹர்சிம்ரன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.
டெல்லி சிறப்பு பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், ராஜேஷ் சிங் என்ற போலி பாஸ்போர்ட்டில் தாய்லாந்து நாட்டுக்கு ஹர்சிம்ரன் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத் துறையின் வேண்டுகோளை ஏற்று தாய்லாந்து போலீஸார் அண்மையில் ஹர்சிம்ரனை பாங்காக்கில் கைது செய்தனர். கடந்த 26-ம் தேதி அவர் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறியதாவது: இந்திய வம்சாவளியை சேர்ந்த கோல்டி தில்லான், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொலை, கொள்ளை, ஆயுத கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். அவரது உதவியுடன் ஹர்சிம்ரன் இந்தியாவில் இருந்து தப்பி துபாய் சென்றுள்ளார். அங்கிருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றுள்ளார்.
அங்கிருந்து ஐரோப்பா அல்லது அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருந்தார். இந்திய உளவுத் துறையின் தகவலால் பாங்காக்கில் ஹர்சிம்ரன் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.