

புதுடெல்லி: ஒரு பெண் பத்திரிகையாளர் உள்ளிட்ட மூவர் மீது டெல்லி காவல் துறையின் ஏசிபி விவேக் பகத், வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர்மந்தரில் அக்டோபர் 3-ல் போராட்டம் தொடங்கியது. முதல்நாளில், பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் உதவி ஆணையர் (ஏசிபி) மீது 2 பெண் பத்திரிகையாளர்கள் டெல்லி நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
இச்சூழலில், இந்த 2 பெண் பத்திரிகையாளர்களில் ஒருவர் உட்பட 3 பேர் மீது ஏசிபி விவேக் பகத், நாடாளுமன்ற காவல் நிலையத்தில் கடந்த 13-ம் தேதி புகார் அளித்துள்ளார். அதில் ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது மூவரும் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதுடன் பணிசெய்ய விடாமல் தடுத்ததாகக் கூறியுள்ளார். இதன் அடிப்படையில், எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் டெல்லி காவல் துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.
இதில் ரோஸி என்ற பெண் செய்தியாளர், செய்தி இணையதளம் ஒன்றோடு தொடர்புடைய கஜேந்திர சிங் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது சட்டையில் இருந்த பெயரைப் பார்த்த பத்திரிகையாளர் ரோஸி, தனது சாதி குறித்து இழிவான கருத்துகளைக் கூறியதாக விவேக் குற்றம் சாட்டியுள்ளார். ரோஸியின் சக ஊழியரான கஜேந்திர சிங் மற்றும் பிறர் முன்னிலையில் இந்த வன்கொடுமை நிகழ்ந்ததாகவும் ஏசிபி விவேக் தெரிவித்துள்ளார்.
ஏசிபி விவேக் மேக்வால் எனும் பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். சம்பவம் நடந்த அன்று மாலை ரோஸியும் அவரது சகாக்களும் காவல் நிலையம் முன் கூடி, தனக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தன்னை ஒரு பாலியல் குற்றவாளியாக சித்தரித்ததாக ஏசிபி குற்றம் சாட்டியுள்ளார்.