

புதுடெல்லி: கடந்த ஜூலை 20 அன்று டெல்லியில் நடந்த நாடாளுமன்றம் நோக்கிய சிஜேபி பேரணியில் கலந்து கொண்டோர் மீது அதீத பலம் பிரயோகப்படுத்தப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு, காவல் துறை பதிலளிக்கமாறு நோட்டீஸ் அனுப்பியது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தார்மிக பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இந்த இயக்கத்தினர் கடந்த ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டனர்.
சிறிது தூரத்திலேயே, அவர்கள் தடுத்த நிறுத்தப்பட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி மாணவர்கள், இளைஞர்கள் பலர் காயமடைந்தனர். இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிகே உபாத்யாயா, நீதிபதி தேஜஸ் காரியா உள்ளிட்டோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசு அனைத்து சிசிடிவி காட்சிகள், பாடி கேமராக்களின் பதிவுகள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்கும்படி வலியுறுத்தினர். மேலும், மத்திய அரசு, காவல் துறை பதிலளிக்கமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 11-க்கு ஒத்திவைத்தனர்.
10 எஃப்ஐஆர்கள் பதிவு:
முன்னதாக, போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக டெல்லி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் 4 எஃப்ஐஆர்கள், கனாட் பிளேஸ் காவல் நிலையத்தில் 3, மந்திர் மார்க், பாரகம்பா சாலை மற்றும் கடமைப் பாதை ஆகிய காவல் நிலையங்களில் தலா 1 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டன.
போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபடுதல், காவல்துறை மீது கல்வீச்சு, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்றும் காவல் துறை விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், பேரணியில் நடந்த வன்முறை குறித்து டெல்லி போலீஸ், மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.