ஜந்தர் மந்தர் தாக்குதல் வழக்கில் சுதந்திரா பரத்வாஜுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

டெல்லி நீதிமன்றம் உத்தரவு
ஜந்தர் மந்தர் தாக்குதல் வழக்கில் சுதந்திரா பரத்வாஜுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
Updated on
1 min read

புதுடெல்லி: போக்சோ சட்டத்தின் கீழும், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்ட இன்ஃப்ளூயன்சர் சுதந்திரா பரத்வாஜை 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, மாணவர் ஆர்வலர் நிஷு ஆசாத்தின் தந்தையை தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சுதந்திரா பரத்வாஜை டெல்லி போலீஸார் உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் கடந்த 4ம் தேதி கைது செய்தனர்.

சுதந்திரா பரத்வாஜுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழும், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்த போலீஸார், டெல்லியில் உள்ள கார்கர்டூமா நீதிமன்ற வளாகத்தில் தொடர்புடைய நீதிபதி முன் அவரை ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, சுதந்திரா பரத்வாஜ் வீடியோ கான்பரஸிங் முறையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி சவுரப் பிரதாப் லாலெர் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை, 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த ஜூலை மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தின் போது நிஷு ஆசாத்தின் தந்தை சஞ்சய் தாக்கப்பட்டார். இதற்கு காரணமான இன்ஃப்ளூயன்சர் சுதந்திரா பரத்வாஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாடாளுமன்ற வீதி காவல் நிலையம் முன்பு சி.ஜே.பி உறுப்பினர்கள் கடந்த 4ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சுதந்திரா பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, சுதந்திரா பரத்வாஜ் அளித்த நேர்காணல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில், சஞ்சய் குமாரை தான் தாக்கியது குறித்தும், தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு குறித்தும் அவர் விளக்கி இருந்தார். அதன் காரணமாகவே தான் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறி இருந்தார்.

அந்த வீடியோ போலியானது என்றும், தற்காத்துக்கொள்ளும் நோக்கிலேயே சஞ்சய் குமாரை தாக்கியதாகவும் சுதந்திரா பரத்வாஜ் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜந்தர் மந்தர் தாக்குதல் வழக்கில் சுதந்திரா பரத்வாஜுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
டெல்லி கட்டிட விபத்து உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு; இதுவரை 12 பேர் மீட்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in