டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கேஜ்ரிவால் உட்பட 23 பேர் விடுதலை

சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் கண்கலங்கினார்
நீதிமன்ற வளாகத்தில் கண்கலங்கியபடி பேட்டி அளிக்கிறார் கேஜ்ரிவால். (அடுத்த படம்) விடுதலையான முன்னாள் எம்.பி. கவிதா ஹைதராபாத்தில் நிருபர்களை சந்தித்தார். படங்கள்:பிடிஐ

நீதிமன்ற வளாகத்தில் கண்கலங்கியபடி பேட்டி அளிக்கிறார் கேஜ்ரிவால். (அடுத்த படம்) விடுதலையான முன்னாள் எம்.பி. கவிதா ஹைதராபாத்தில் நிருபர்களை சந்தித்தார். படங்கள்:பிடிஐ

Updated on
2 min read

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பு வெளியானதும் கேஜ்ரிவால் கண்ணீர்விட்டு அழுதார்.

கடந்த 2015 பிப்ரவரி முதல் 2024 செப்டம்பர் வரை டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தியது. அப்போது 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தின. சிபிஐ பதிவு செய்த வழக்கில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் எம்.பி. கவிதா உள்ளிட்ட 23 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தனியாருக்கு மதுபானக் கடை உரிமங்கள் வழங்கியதில் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டிருப்பதாக சிபிஐ அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

இந்த வழக்கில் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியில் வந்தனர்.சிபிஐ பதிவு செய்த வழக்கின் விசாரணை, டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முடிவடைந்தது.

சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: மதுபானக் கொள்கை வழக்கின் முதல் எதிரியாக டெல்லி கலால் துறையின் அப்போதைய துணை ஆணையர் குல்தீப் சிங் சேர்க்கப்பட்டு உள்ளார்.

அவர் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, வழக்கில் சிக்க வைக்கப்பட்டு உள்ளார். அவரை விசாரித்த சிபிஐ அதிகாரி மீது துறைரீதியாக விசாரணை நடத்த உத்தரவிடுகிறேன்.

மதுபானக் கொள்கையில் சதியோ, கிரிமினல் குற்றமோ கண்டறியப்படவில்லை. சிபிஐ ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தும் போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள 23 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்கிறேன். இவ்வாறு நீதிபதி ஜிதேந்திர சிங் தீர்ப்பளித்தார்.

டெல்லி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. டெல்லி சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறும் போது, “எனது வாழ்க்கையில் நேர்மையை மட்டுமே சம்பாதித்து வைத்திருந்தேன். ஆனால், என் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது டெல்லி நீதிமன்றம் என்னையும் ஆம் ஆத்மி தலைவர்களையும் நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்திருக்கிறது” என்று தெரிவித்தார். அவர் பேட்டியளித்து கொண்டிருந்த போது உணர்ச்சிப் பெருக்கில் திடீரென கண்ணீர்விட்டு கதறி அழுதார். அவரை, மணீஷ் சிசோடியா அரவணைத்து தேற்றினார்.

அமலாக்கத் துறை வழக்கு: டெல்லி மதுபான உரிமம் முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் மட்டுமே தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதே விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை சார்பில் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தென்னிந்தியாவை சேர்ந்த மதுபான நிறுவனங்கள், முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ரூ.100 கோடி லஞ்சம்வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கையும் டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜிதேந்திர சிங்கே விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>நீதிமன்ற வளாகத்தில் கண்கலங்கியபடி பேட்டி அளிக்கிறார் கேஜ்ரிவால். (அடுத்த படம்) விடுதலையான முன்னாள் எம்.பி. கவிதா ஹைதராபாத்தில் நிருபர்களை சந்தித்தார். படங்கள்:பிடிஐ</p></div>
“டெல்லி ஃபார்முலாவை தமிழகத்திலும் செய்ய நினைக்கிறது பாஜக” - கேஜ்ரிவால் சிறைவாசத்தை குறிப்பிட்டு ஸ்டாலின் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in