

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சீக்கிய பாதுகாவலர்கள் கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி படுகொலை செய்ததை தொடர்ந்து, டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் 2,700 பேர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தை தூண்டியதாக காங்கிரஸ் முன்னாள் எம்.பிசஜ்ஜன் குமார் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்புநீதிமன்ற நீதிபதி நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: டெல்லி ஜனக்புரி, விகாஸ்புரியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சஜ்ஜன் குமாருக்கு எதிராக முன்னிறுத்தப்பட்ட அரசு தரப்பு சாட்சிகள் கேள்விக்குறியதாக உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்களை 30 ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடவில்லை. இதுபோன்ற சாட்சிகளை நம்பினால் ஆபத்தாகி, கேலிகூத்தாகிவிடும்.
தற்போதைய நிலையில் நம்பத்தகுந்த சாட்சிகள் இல்லை. சஜ்ஜன் குமார் கலவரத்தை தூண்டியதற்கான சாட்சியம் இல்லை. குற்றச்சாட்டை அரசு தரப்பு நிரூபிக்க தவறியுள்ளதால், கலவரத்தை தூண்டிய சதிகுற்றச்சாட்டிலிருந்து சஜ்ஜன் குமார் விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
டெல்லி சரஸ்வதி விஹாரில் சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் கலவரத்தை தூண்டி, ஜஸ்வந்த் சிங்கையும், அவரது மகன் தரூண்தீப்பையும் உயிருடன் எரித்து, வீடுகளை கொள்ளையடித்த வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
மேலும் 5 சீக்கியர்களை எரித்து, குருத்வாரை தீக்கிரையாக்கிய வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து சஜ்ஜன் குமார் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.