

புதுடெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அக்.10 போராட்டத்துக்காக டெல்லி மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் சேவைகளை முடக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் பிற மாணவர் அமைப்புகள் இணைந்து டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.
இந்தப் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. மேலும், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி போராட்டம் நடத்த முயல்பவர்களை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, மத்திய ஆயுதக் காவல் படைகளின் 221 படைப்பிரிவுகளைச் சேர்ந்த 23,000 வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. இவர்கள், டெல்லி போலீஸாரோடு இணைந்து பணியாற்ற உள்ளனர். போராட்டக்காரர்கள் போராட்டக் களத்துக்கு வராமல் தடுக்கும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதை எதிர்த்து சிபிஎம் பொதுச செயலாளர் எம்.ஏ. பேபி உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
எம்.ஏ. பேபி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “டெல்லி முழுவதும் பொது முடக்கத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி 57 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடவும், டெல்லிக்கு வரும் ரயில்களை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏதோ ஒரு அச்சத்தின் காரணமாகவோ அல்லது சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இயலாது என்ற காரணத்தாலோ ஒட்டுமொத்த நகரத்தையும் முடக்க முடியாது” என வாதிட்டார். மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, பிரசாந்த் பூஷன் ஆகியோரும் அவருடன் இணைந்து வாதிட்டனர்.
இதையடுத்து, “டெல்லி புறநகர் பகுதிகளில் இருந்து மாநகருக்கு வரும் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். மெட்ரோ நிலையங்களின் நுழைவு வாயில்கள் முழுமையாக மூடப்படுவது குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்.
குருகிராம், கிரேட்டர் நொய்டா மற்றும் என்சிஆர்-ன் பிற பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள், ஊழியர்கள், முதியவர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்படுவார்கள்.
குடிமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இவை சரி செய்யப்பட வேண்டும். பொது ஒழுங்கை பராமரிக்க அதிகாரிகள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தலாம். போக்குவரத்து சேவையை முழுமையாக முடக்கும் நடவடிக்கை தவிர்க்கப்பட வேண்டும்.
எல்லோரிடமும் கார் இருப்பதில்லை. எல்லாவற்றையும் முடக்கிவிட்டு, போக்குவரத்து வசதி இல்லாமல் மக்களை விட்டுவிட முடியாது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.