

டெல்லி கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட்
புதுடெல்லி: டெல்லியில் தெரு நாய்களை கணக்கிடும் பணி அரசு பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதற்கு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடரின் 2-ம் நாளான நேற்று, ஆம் ஆத்மி உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையை எழுப்பி கோஷம் எழுப்பினர். இதற்கு ஆளும் பாஜக உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அமளி ஏற்பட்டதால் சபாநாயகர் விஜேந்தர் குப்தா அவையை 2 முறை ஒத்திவைத்தார்.
இதுதொடர்பாக டெல்லி கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஏற்கெனவே ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், “தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதாக தவறான தகவலை பரப்பி வருகிறீர்கள். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை படித்துப் பாருங்கள். இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோர வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.