

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்களை கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுக்கள் மீது அக்டோபர் 8-ம் தேதிக்குள் முடிவு எடுக்குமாறு மேற்கு வங்க சட்டப்பேரவை சபாநாயகரை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனி அணியாக செயல்பட்டுவரும் அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி, ஃபிர்ஹாத் ஹக்கீம், சந்தீபன் சாஹா, ஷியூலி சாஹா, அக்ருஸ்ஸமான், சபீனா யாஸ்மின், ரதின் கோஷ், பிப்லப் மித்ரா,ஜாவேத் அகமது கான் ஆகிய 10 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி மேற்குவங்க சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால், அந்த மனு மீது 3 மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படாததால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சோபன்தேப் சத்தோபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக் ஷி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, “தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் 3 மாத வரம்பு நிர்ணயித்துள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் முடிவெடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது, இதில் நீதிமன்றம் தலையிடாவிட்டால் அரசியல் குழப்பம் ஏற்படக்கூடும்” என்று வாதிட்டார்.
தலைமை நீதிபதி சூர்யகாந்த், “தகுதி நீக்கம் தொடர்பான முடிவை எடுப்பது குறித்து நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளில் வரையறுக்கப்பட்டுள்ள காலக்கெடுவை சபாநாயகர் பின்பற்றுவார் என்று நம்புகிறேன். இந்த வழக்கில் கால அவகாசம் அக்டோபர் 8-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அதற்குள் உரிய முடிவை எடுக்க சபாநாயகர் அறிவுறுத்தப்படுகிறார்” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.