நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம்

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கும் நிலையில், முதல் நாளிலேயே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜன.28 முதல் பிப்.13-ம் தேதி வரை நடைபெற்றது. மக்களவையில் பிப்.2-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, முன்னாள் ராணுவத் தளபதி நரவனே நினைவுக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகத்தை மேற்கோள் காட்டி, சீன எல்லைப் பிரச்சினை குறித்துப் பேச முயன்றார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர். அப்போது, திரிணமூல் கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட வில்லை. இந்நிலையில், தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அக்கட்சி எம்.பி.க்களுக்கு மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இந்த சூழலில், பட்ஜெட் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்குகிறது. ஏற்கெனவே அறிவித்தபடி, முதல் நாளில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

நோட்டீஸ் வழங்கப்பட்ட நாள் முதல் சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவையை நடத்தவில்லை. இன்றும் அவர் அவையை வழிநடத்த மாட்டார். அவருக்கு பதிலாக மூத்த எம்.பி. ஒருவர், அவையை நடத்துவார். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து முதலில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதற்கு 50 எம்.பி.க்கள் ஆதரவு அளித்தால் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும்.

கொறடா உத்தரவு: மார்ச் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை எம்.பி.க்கள் அனைவரும் மக்களவைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் சார்பில் தனித்தனியாக கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

திமுக, சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மக்களவையில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று அந்தந்த கட்சிகளின் தலைமை அறிவுறுத்தி உள்ளது.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நிறைவடைந்த பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும். அவையில் இருக்கும் எம்.பி.க்களில் 50 சதவீதம் பேர் ஆதரவு அளித்தால் மட்டுமே தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு போதிய எம்.பி.க்களின் பலம் இல்லை. எனவே தீர்மானம் தோல்வி அடையும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in