

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று காரசார விவாதம் நடைபெற்றது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச சபாநாயகர் ஓம் பிர்லாஅனுமதி வழங்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து, ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த சூழலில் நேற்று அவையை நடத்திய பாஜக மூத்த எம்.பி. ஜெகதாம்பிகா பால், ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் மீது 10 மணி நேரம் விவாதம் நடத்த அனுமதி வழங்கினார். அப்போது, ஜெகதாம்பிகா பால் அவையை நடத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசும்போது, “மக்களவை சபாநாயகரை நீக்கக் கோரும் தீர்மானம் விவாதிக்கப் படும்போது, ஓம் பிர்லாவால் நியமிக்கப்பட்ட தலைவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள ஜெகதாம்பிகா பால் அவையை நடத்தலாம்" என்றார். இதையடுத்து, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, “அவையில் பேசுவதற்கு யாருடைய அனுமதியும் தனக்குத் தேவையில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்தார். பிரதமராகவோ, எதிர்க்கட்சித் தலைவராகவோ அல்லது வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருக்கலாம். ஆனால் சபாநாயகரின் அனுமதி இன்றி அவையில் யாரும் பேச முடியாது.
மேலும் ஒரு முறை (2018-ல்) மக்களவையில் பிரதமரை நோக்கி வந்து அவரை கட்டிப் பிடித்துவிட்டு, பிறகு தனது இடத்துக்குத் திரும்பிச் சென்று சக எம்.பி.க்களைப் பார்த்து கண் சிமிட்டிய ஒரு தலைவரை (ராகுல்) நான் இதுவரை பார்த்ததில்லை" என்றார். பின்னர் பல எம்.பி.க்கள் பேசினர். தொடர்ந்து இன்றும் விவாதம் நடைபெற உள்ளது. இறுதியில் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.