‘முரசு’ புயல் பாதிப்பு: ஆந்திராவில் கனமழையால் 30,661 ஹெக்டேர் பயிர்கள் சேதம், கால்நடைகள் மாயம்

‘முரசு’ புயல் பாதிப்பு: ஆந்திராவில் கனமழையால் 30,661 ஹெக்டேர் பயிர்கள் சேதம், கால்நடைகள் மாயம்
Updated on: 
1 min read

அமராவதி: ஆந்திராவின் ஓங்​கோல் அருகே ‘முரசு’ புயல் கரையைக் கடந்​தது. அப்​போது பெய்த கனமழையால் 30,661 ஹெக்​டேர் பயிர்கள் சேதமடைந்​தன. 15 மாவட்​டங்​களில் தொடர்ந்து மழை பெய்து வரு​கிறது.

வங்க கடலில் ஏற்​பட்ட குறைந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் ‘முரசு’ புய​லாக உரு​வெடுத்து ஆந்​திராவின் ஓங்​கோல் அருகே நேற்று அதி​காலை கரையைக் கடந்​தது. அப்​போது கன மழையுடன் மணிக்கு 120 கி.மீ வேகத்​தில் பலத்த காற்று வீசி​யது.

ஆந்​திராவின் தென் கடலோர பகுதி​களான பாபட்லா, ஓங்​கோல், காக்​கிநாடா, ஏலூரு, நெல்​லூரு உள்ளிட்ட 15 மாவட்​டங்​களில் கன மழையும், சூறாவளி காற்​றும் வீசின. தாழ்​வான பகுதி​களில் வெள்​ளம் புகுந்​தது. முக்​கிய நீர்​நிலைகள் நிரம்​பின.

பல்​வேறு இடங்​களில் மரங்​கள், மின் கம்​பங்​கள் சரிந்​தன. மின்​சார கம்​பிகள் அறுந்து விழுந்​தன. கனமழை பெய்த மாவட்​டங்​களில் 30,661 ஹெக்​டேர் பயிர்​கள் சேதமடைந்​தன. ஏராளமான கால்​நடைகள் வெள்​ளத்​தில் அடித்து செல்​லப்​பட்​டன.

புயல் கரையை கடந்த பின்​னரும், 15 மாவட்​டங்​களில் கன மழை பெய்து வரு​கிறது. அடுத்த 2 நாட்​களுக்கு தென் கடலோர மாவட்​டங்​கள் மற்​றும் ராயலசீமாவில் மழை நீடிக்​கும் என விசாகப்​பட்​டின வானிலை மையம் எச்​சரித்​துள்​ளது.

சந்​திர​பாபு நாயுடு ஆய்வு

முரசு புய​லால் பாதிக்​கப்​பட்ட இடங்​கள் குறித்​தும், மக்​களின் நிலை குறித்​தும் நேற்று அதி​காலை 5 மணி​யில் இருந்தே ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு காணொலி மூலம் மாவட்ட ஆட்சி​யர்​கள் மற்​றும் துறைரீதி​யான முக்​கிய அதி​காரி​களிடம் விவரங்​களை கேட்​டறிந்​தார்.

அப்​போது முதல்​வர் கூறிய​தாவது: வெள்ள பாதிப்பு பகுதி​களில் 171 முகாம்​கள் அமைக்​கப்​பட்டு உள்​ளன. இந்த முகாம்​களில் 10,805 பேர் தங்கி உள்​ளனர். 14,810 உணவு பொட்​டலங்​கள் விநியோகம் செய்​யப்​பட்​டுள்​ளன. 11 மத்​திய பேரிடர் மீட்​புக் குழுக்​கள், 13 மாநில பேரிடர் மீட்பு குழுக்​கள் மீட்​புப் பணிகளில் ஈடு​பட்​டுள்​ளன. 613 ஜெனரேட்​டர்​கள் பயன்​படுத்​தப்​படு​கிறது. மரங்​களை வெட்டி அப்​புறப்​படுத்த 185 குழுக்​கள் களப்​பணி​யாற்றி வரு​கின்​றன.

புயலுக்கு முன்​பாகவே 3,066 கர்ப்​பி​ணிகள், 1,008 இளம் தாய்மார்கள் மருத்​து​வ​மனைகளில் தங்க வைக்​கப்​பட்​டனர். 13 மாவட்​டங்​களில் 725 மருத்​துவ குழு​வினர், 362 ஆம்​புலன்ஸ்​கள் சேவை​யில் ஈடு​பட்டு உள்​ளன.

புயல் குறித்த தகவல்​கள் 3.77 கோடி பேரின் செல்​போன்​களுக்கு அவ்​வப்​போது அனுப்​பப்​படு​கிறது. முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கை​யாக 4,095 கிராமங்​களில் மின் விநியோகம் நிறுத்​தப்​பட்​டது. மொத்​தம் 30,661 ஹெக்​டேர் அளவுக்கு நெல், பருத்தி, மிளகாய், பழங்​கள்,காய்​கறிகள் அடங்​கிய பயிர்​கள் நாசம் அடைந்​த​தாக முதற்​கட்ட அறிக்​கையை அதி​காரி​கள் தாக்​கல் செய்​துள்​ளனர். போர்க்​கால அடிப்​படை​யில் மீட்​புப் பணிகள் நடை​பெற்று வருகிறது. இவ்​வாறு முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தெரி​வித்​தார்.

‘முரசு’ புயல் பாதிப்பு: ஆந்திராவில் கனமழையால் 30,661 ஹெக்டேர் பயிர்கள் சேதம், கால்நடைகள் மாயம்
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு

X