

சத்திஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா
ராய்பூர்: பிரதமர் மோடியை இத்தாலி நாட்டை சேர்ந்த அரசியல் பிரமுகர் விமர்சித்ததை ஏற்க முடியாது என்று சத்திஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: “திருமணத்துக்கு பிறகு இத்தாலியை சேர்ந்த ஒருவர் இந்தியாவுக்கு வருகை தந்தது ஏற்கப்பட்டது. அதற்காக இத்தாலியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர், இந்தியாவுக்கு வருகை புரிந்து, காங்கிரஸ் கட்சியை ஆதரித்து, பிரதமர் மோடிக்கு எதிராகவும் பேசியதை ஏற்க முடியாது.
அந்த இத்தாலி அரசியல் பிரமுகர், ‘வாக்கு திருட்டு’ குறித்து பேசியுள்ளார். அதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கைதட்டி வரவேற்கிறார். அதை எப்படி அனுமதிக்க முடியும்? எந்த வகையிலும் ஏற்க முடியாது.
ராகுல் காந்தி ஏற்கனவே சர்வதேச நாடுகளின் மேடைகளில் இந்தியாவின் அரசியலமைப்பு குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்துள்ளார். இப்போது இந்திய மண்ணிலேயே அதைச் செய்துள்ளார். மக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான பதிலடியை அவர்கள் கொடுப்பார்கள்” என்று பாஜகவை சேர்ந்த விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
ஐரோப்பிய சோசியலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜியாகோமோ பிலிபிக், ஹைதராபாத்தில் நடந்த பாரத் மாநாடு என்ற நிகழ்வில் பங்கேற்று பேசினார். அப்போது வாக்கு திருட்டு குறித்து அவர் பேசியது சர்ச்சையானது.
இது உள்நாட்டு அளவிலும், இத்தாலி அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாகி உள்ளது. இதற்கு பாஜக மற்றும் இத்தாலியில் ஆட்சியில் உள்ள கூட்டணி கட்சியான ஃபோர்ஸா இத்தாலிய கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சர்வதேச அளவில் அரசியல் சார்ந்த கருத்து பரிமாற்றங்கள் பொதுவானவை என்று சிவ சேனாவின் (உத்தவ் அணி) சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.