

புதுடெல்லி: மத்திய அரசின் இ20 பெட்ரோல் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும் என்று ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.
மத்திய அரசின் இ20 பெட்ரோல் கொள்கை குறித்து பிரதமருடன் பேச ஆம் ஆத்மி நேரம் கேட்டும் பதில் கிடைக்கவில்லை. இதனால் அக்கட்சி, எத்தனால் குறித்த மக்கள் கூட்டங்களையும், கையெழுத்து இயக்கத்தையும் நடத்தியது. இ20 பெட்ரோல் அச்சத்தால் மக்கள் பெட்ரோல் கார்களைத் தவிர்த்து சிஎன்ஜி, மின்சார வாகனங்களுக்கு மாறுவதால் டீலர்களிடம் கார்கள் தேங்கியுள்ளதாக ‘எக்ஸ்’ பதிவில் கூறப்பட்டிருந்தது.
அதற்குப் பதிலளித்த அர்விந்த் கேஜ்ரிவால், மக்கள் பெட்ரோல் வாகனங்களை வாங்குவதை நிறுத்திவிட்டதால் அரசு எத்தனால் கொள்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லையெனில் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.மேலும், சாதாரண பெட்ரோல் அல்லது இ20 பெட்ரோலைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும், இ20-ஐ ஊக்குவிக்க அதைக் குறைந்த விலையில் விற்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இ20 பெட்ரோல் பாதுகாப்பானது
இதற்கிடையில் இ20 பெட்ரோலில் ஈரம், குளோரைடு கலந்துள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, எண்ணெய் நிறுவனங்கள் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் பெட்ரோல் தரம் சரியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி இ 20 பெட்ரோலை நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.