

மேற்கு வங்க தேர்தலையொட்டி கூச் பெஹாரில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவரை வரவேற்ற பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள். படம்: பிடிஐ
கூச் பெஹார்: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சியின் கவுன்ட்டவுன் தொடங்கி விட்டது என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
கூச் பெஹார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் மால்டா மற்றும் சந்தேஷ்காளியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்குத் திரிணமூல் காங்கிரஸே பொறுப்பு. மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து காட்டாட்சி நிலவுகிறது. உச்ச நீதிமன்றமே இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மக்களின் சொத்துகளைத் திரிணமூல் கொள்ளையடிக்கிறது. இதற்கு மே 4-ம் தேதி முடிவுகட்டப்படும். மம்தா அரசின் கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது.
ஒருபுறம், ஊடுருவல்காரர் களால் தங்கள் சொந்த மண்ணிலேயே சுதந்திரத்தை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் மேற்கு வங்க மக்களிடையே நிலவுகிறது. மறுபுறம், பாஜக அவர்களது மண்ணில் தலைநிமிர்ந்து வாழும் நம்பிக்கையை அளிக்கிறது. மம்தா ராஜ்ஜியத்தில் சொத்துக்களைப் பறிகொடுக்கும் பயம் ஒருபுறம் என்றால், பாஜக ஆட்சியில் சொந்தமாக வீடும், நில உரிமையும் கிடைக்கும் என்ற உறுதி மறுபுறம் உள்ளது. இதனை மேற்கு வங்க மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
தேர்தல் நாளில் திரிணமூல் காங்கிரஸ் குண்டர்களுக்கு மக்கள் அஞ்ச வேண்டாம். மே 4-ம் தேதியுடன் மம்தா ஆட்சி முடிவுக்கு வந்ததும், சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட குண்டர்கள் மற்றும் அவர்களது சிண்டிகேட்கள் மீது சட்டம் தனது கடமையைச் செய்யும்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடுவழங்க தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்காக ஏப்ரல் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட உள்ளது. அதேபோல், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதி இடங்கள் பாதிக்கப்படாது என கூச் பெஹார் மண்ணில் இருந்து நான் உறுதி அளிக்கிறேன்.
மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களைக் காப்பாற்றுவதற்காகவே தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை திரிணமூல் காங்கிரஸ் எதிர்த்து வருகிறது. 2026-ம் ஆண்டு தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடக்கும் எனத் தேர்தல் ஆணையத்தின் மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, இந்தத் தேர்தல் மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.