

ராம்பூர்: கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான் போட்டியிட்டார். அப்போது நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆசம் கான் பேசும்போது, ‘‘மாவட்ட ஆட்சியர் ஒரு சம்பளம் வாங்கும் ஊழியர். இந்த ஆட்சியரைக் கண்டு பயப்படத் தேவையில்லை’’ என்று பேசியிருந்தார்.
மேலும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின், காலணிகளை உயர் அதிகாரிகள் சுத்தம் செய்வதை புகைப்படங்களில் பார்த்ததாகக் கூறி மற்றொரு சர்ச்சையைக் கிளப்பினார். இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் போலீஸார் ராம்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின் போது, பிரச்சாரக் கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள், ஆவண சான்றுகள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலங்களை அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்ததையடுத்து, ஆசம் கான் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இதன்படி, அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆசம் கான் இப்போது ராம்பூர் தொகுதி எம்எல்ஏ-வாக உள்ளார். தேர்தல் சட்டங்களின்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். எனவே, இந்தத் தீர்ப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.