

புதுடெல்லி: ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ வெளியுறவுத் துறை அமைச்சகம் கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது.
டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாட்டு மையம், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிப்பவர்கள் 1800118797, 91 11 23012113, 91 1123014104, 91 1123017905 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மத்திய கிழக்கு நாடுகளின் நிலவரத்தை தீவிரமாக கண்காணிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சகம், நாட்டு நலனுக்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளின் அரசுகளுடனும் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
முன்னதாக, அணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு மறுத்த ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த மாதம் 28-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமேனி உட்பட 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள், தூதரகம்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இது மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், இந்தியர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.