கட்டுமானப் பொருட்கள் விவகாரம்: கேரளாவுக்கு விலக்களிக்க விஜய் உறுதி என சதீசன் தகவல்

கட்டுமானப் பொருட்கள் விவகாரம்: கேரளாவுக்கு விலக்களிக்க விஜய் உறுதி என சதீசன் தகவல்
Updated on
2 min read

திருவனந்தபுரம்: கற்கள், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் உள்ள கட்டுப்பாடுகளில் இருந்து கேரளாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து தமிழ்நாடு பரிசீலிக்கும் என்று முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளதாக கேரள முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார்.

தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, தமிழக முதல்வரும், கேரள முதல்வரும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். இந்த சந்திப்பை அடுத்து கேரளா திரும்பிய முதல்வர் வி.டி. சதீசன், தனது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து, தமிழ்நாடு முதல்வர் விஜய் உடன் ஆக்கபூர்வமான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளிலிருந்து கேரளாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து தமிழ்நாடு பரிசீலிக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார். நமது மாநிலத்திற்குச் சாதகமான முடிவை எட்டுவதற்கு, இது தொடர்பாக விரைவில் மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.” என தெரிவித்துள்ளார்.

தமிழகத்​தில் இருந்து கேரளா, ஆந்​திரா உட்பட பல்​வேறு மாநிலங்​களுக்கு கற்​கள், ஜல்​லி, எம்​சாண்ட் உள்​ளிட்ட கட்டுமானப் பொருட்​கள் அதி​கள​வில் கொண்டு செல்​லப்​பட்​டன. இந்​நிலை தொடர்ந்​தால் தமிழகத்​தில் கனிம வளங்​கள் பற்​றாக்​குறை ஏற்​பட்​டு, அவற்​றின் விலை உயரும். மேலும், கனிம வளங்​கள் தொடர்ந்து தோண்டி எடுக்​கப்​படு​வ​தால் சுற்​றுச்​சூழலும் கடுமை​யாகப் பாதிப்​படை​யும் என்று சமூக ஆர்​வலர்​கள் எச்​சரித்து வந்​தனர்.

இதையடுத்து தமிழகத்​தில் இருந்து பிற மாநிலங்​களுக்கு கனிமங்​களை கொண்டு செல்ல 3 மாதங்​களுக்கு தற்​காலிக தடை விதித்து தமிழக அரசு சமீபத்​தில் உத்​தர​விட்​டது. இந்​தத் தடை​யில் தளர்வு வழங்​கு​மாறு தமிழக முதல்வர் விஜய்க்கு, கேரள முதல்​வர் வி.டி.சதீசன் கடந்த மாதம் கடிதம் எழுதி இருந்தார்.

அந்தக் கடிதத்தில், “தமிழகத்​தில் இருந்து ஜல்​லிக் கற்​கள் உட்பட கட்​டு​மானப் பொருட்​களை வெளி மாநிலங்​களுக்கு கொண்டு செல்ல கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்ட தகவலை அறிந்​தேன். இந்த நடவடிக்​கை​யால் திருநெல்​வேலி, தென்​காசி, கன்​னி​யாகுமரி ஆகிய மாவட்​டங்​களில் இருந்து கேரளா​வுக்கு கட்​டு​மானக் கற்​கள் வரு​வது பெரு​மளவு பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

கேரளா​வில் நடை​பெறும் தேசிய நெடுஞ்​சாலைத் திட்​டங்​கள், தமிழகத்​தில் இருந்து கொண்டு வரப்​படும் கற்​களை நம்​பியே இருக்​கின்​றன. எனவே, தற்​போதைய தடை​யால் கேரளா​வில் நடை​பெற்​று​வரும் பல தேசிய நெடுஞ்​சாலைத் திட்​டங்​களின் கட்​டு​மானப் பணி​கள் பாதிக்​கப்​பட்​டு, அவை தாமதமடை​யும் அபாயம் ஏற்​பட்​டுள்​ளது.

இந்​தத் திட்​டங்​கள் கேரளா​வுக்கு மட்​டுமின்​றி, ஒட்​டுமொத்த தென் மண்​டலத்​தின் பொருளா​தார வளர்ச்​சி, பிராந்​திய இணைப்​பு, சரக்கு போக்​கு​வரத்து மற்​றும் சுற்​றுலா மேம்​பாட்​டுக்​கும் முக்கியமானவை.

இயற்கை வளங்​களை நிலை​யாகப் பாது​காக்​கும் தமிழக அரசின் கொள்கை நோக்​கங்​களை கேரளா பாராட்​டு​கிறது. அதே​நேரம், தேசிய முக்​கி​யத்​து​வம் வாய்ந்த உள்​கட்​டமைப்​புத் திட்​டங்​களின் நியாய​மான தேவையைக் கருத்​தில்​கொண்டு ஒரு சமநிலை​யான அணுகு​முறையை உரு​வாக்​கி​னால், உங்​கள் கொள்​கை​யிலும் பாதிப்​பும் ஏற்​ப​டா​மல் பார்த்​துக் கொள்​ளலாம்.

எனவே, கேரளா​வில் நடை​பெறும் தேசிய நெடுஞ்​சாலை மற்​றும் முக்​கிய உள்​கட்​டமைப்​புப் பணி​களுக்கு பிரத்​யேக​மாகத் தேவைப்​படும் ஜல்​லிக் கற்​களை மட்​டும் தடை​யின்றி கொண்டு செல்​ல வசதி​யாக, உரிய தளர்வு அல்​லது சிறப்பு நடை​முறையை ஏற்​படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், கட்டுப்பாடுகளில் இருந்து கேரளாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து தமிழகம் பரிசீலிக்கும் என்று முதல்வர் விஜய் கூறியுள்ளதாக கேரள முதல்வர் சதீசன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுமானப் பொருட்கள் விவகாரம்: கேரளாவுக்கு விலக்களிக்க விஜய் உறுதி என சதீசன் தகவல்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பகவதி சேவை, கலச வழிபாடு கோலாகலம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in