சபாநாயகர் ஓம் பிர்லா | கோப்புப்படம்
சபாநாயகர் ஓம் பிர்லா | கோப்புப்படம்

ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி காங்கிரஸ் நோட்டீஸ்!

Published on

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன.28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்.1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிப். 4 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உரையாற்றுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி அன்று அவைக்கு வரவில்லை.

இந்நிலையில், “பிரதமர் மோடியை நான்தான் வர வேண்டாம் என்று கூறினேன்” என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதனால் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பின. குறிப்பாக காங்கிரஸ் கட்சி பெண் எம்.பி.க்கள் அவமதிக்கப்பட்டதாக கூறி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது.

இந்நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை நீக்கக் கோரி அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இன்று (பிப். 10) நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 119 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதிக்கப்படவில்லை, 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் மீதான அவதூறு ஆகியவற்றுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஓம் பிர்லா கூறியது என்ன? முன்னதாக சபாநாயகர் ஒம் பிர்லா, ‘‘மக்களவையில் சில எம்பிக்கள் முறையற்ற முறையில் நடந்து கொண்டனர். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரை நிகழ்த்த பிரதமர் மோடி மக்களவைக்கு வருவதாக இருந்தார். அவர் வருவதற்கு முன்பாக, காங்கிரஸ் பெண் எம்பிக்கள் பிரதமர் இருக்கையைச் சுற்றி வளைத்திருந்தனர்.

பிரதமரின் உரையின்போது, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி எம்பிக்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்யலாம் என்று எனக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தது. அரசியல் கருத்து வேறுபாடுகள் நாடாளுமன்ற அவைக்குள் கொண்டுவரப்பட்டதில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்பிக்கள், பிரதமரின் இருக்கைக்குச் சென்று எதிர்பாராத ஒரு சம்பவத்தை நிகழ்த்தக்கூடும் என எனக்கு நம்பகமான தகவல் கிடைத்தது.

அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அது தேசத்தின் கண்ணியத்துக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கும். அதனால்தான், நடாளுமன்றத்துக்கு வர வேண்டாம் என பிரதமரை நான் கேட்டுக்கொண்டேன். நேற்று நடந்தது நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு கரும்புள்ளி’’ என தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

சபாநாயகர் ஓம் பிர்லா | கோப்புப்படம்
“முதல்வர் ஸ்டாலினின் பொய்கள் இனி தமிழக மக்களிடம் எடுபடாது” - பழனிசாமி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in