

புதுடெல்லி: ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்க அமெரிக்கா அளித்த கெடு இன்றுடன் முடிகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் இறையாண்மை மற்றும் எரிசக்திப் பாதுகாப்பை பிரதமர் மோடி தலைமையிலான அரசு சமரசம் செய்து கொண்டுள்ளது. நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்காவுக்கு முன் மோடி அரசு பணிந்து போனதற்கான விலையை, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் கடுமையான தட்டுப்பாடுகள் வாயிலாக ஒட்டுமொத்த தேசமும் இன்று கொடுத்துக் கொண்டிருக்கிறது.
முதலாவதாக, அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில், ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை பிரதமர் மோடி அரசு நிறுத்தியது. பின்னர், போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா, இந்தியாவுக்கு ஒரு மாதம் விலக்கு அளித்தது.
இந்த விவகாரத்தில் நாட்டின் நலனை முன்னிறுத்தித் தானே ஒரு முடிவை எடுப்பதற்குப் பதிலாக, பிரதமர் மோடி அரசு அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பணிந்துபோய், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு மீண்டும் அனுமதி கோரி கெஞ்சிக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.