

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி காங்கிரஸ் சார்பில் நேற்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது.
தலைநகர் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகம் நோக்கி காங்கிரஸார் பேரணியாக சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் தேர்தல் ஆணைய அலுவலகத்தை காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணி நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டினர். உத்தராகண்ட் தலைநகர் டேராடூனில் தடுப்புகளை மீறி செல்ல முயன்ற காங்கிரஸார் தடுத்து நிறுத்தப்பட்டனர். அசாமின் குவஹாட்டி நகரில் தேர்தல் ஆணையம் நோக்கி காங்கிரஸார் பேரணியாக சென்றனர். அந்த மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் பேரணியை வழிநடத்திச் சென்றார்.
பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் தேர்தல் ஆணையம் நோக்கி காங்கிரஸார் பேரணியாக சென்றனர். உத்தர பிரதேச தலைநகர் லக்னோ, அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகர், காஷ்மீரின் ஸ்ரீநகர், ஜம்மு, மேற்குவங்க தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் அக்டோபர் 2-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஜந்தர் மந்தரின் அனைத்து நுழைவுவாயில்களும் மூடப்பட்டுள்ளன.