

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மகாராஷ்டிராவின் புனே நகரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் வினாத்தாள் கசிவு, வேலைவாய்ப்பின்மை, கல்வி கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சுமார் 10,000 மாணவியருடன் அவர் கலந்துரையாட உள்ளார்.
இந்த சூழலில் ராகுல் காந்தியின் புனே நிகழ்ச்சியில் பங்கேற்க யூடியூப், சமூக வலைதள பிரபலங்களுக்கு காங்கிரஸ் சார்பில் பணம் வழங்கப்படுகிறது என்று பாஜக பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பான ஆடியோ ஆதாரத்தையும் அந்த கட்சி வெளியிட்டு இருக்கிறது. மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் சமூகவலைதள பிரபலத்தை, சாந்தனு என்ற நபர் அண்மையில் மொபைல்போனில் தொடர்பு கொண்டார்.
ராகுல் காந்தியின் புனே நிகழ்ச்சியில் அந்த பெண் பிரபலம் பங்கேற்க அழைப்பு விடுத்த சாந்தனு, அதற்காக ரூ.25,000 பணம் வழங்குவதாக உறுதி அளித்தார். மொபைல் போனில் இருவர் இடையிலான ஆடியோ உரையாடலை பாஜக நேற்று தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டது. அதோடு வெளியிடப்பட்ட பதிவில், “ராகுல் காந்தியின் தலைமை மிகவும் பலவீனமாக இருக்கிறது. இதனால் பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.