‘‘வேறு மாநிலங்களுக்கு புலம்பெயரும் மேற்கு வங்கத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்க” - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தல்
Adhir
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு புலம்பெயரும் தொழிலாளர்களை, வங்கதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்கள் என தவறாகக் கருதுவதும், அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதும் தடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை இன்று (டிச.30) சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இது தொடர்பாக தான் எழுதிய கடிதத்தை அவரிடம் வழங்கினார். அந்த கடிதத்தில், ‘மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான பாகுபாடுகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக வெளி மாநிலங்களுக்குச் சென்று தங்கள் உழைப்பையும் திறமையையும் முதலீடு செய்கிறார்கள். நாட்டின் பொருளாதாரச் சக்கரத்தின் முக்கிய அங்கங்களாக அவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஆனால், அவர்கள் வன்முறை, வெறுப்பு, அடித்து கொல்லப்படுதல் போன்றவற்றுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் வங்க மொழியைப் பேசுகிறார்கள் என்பதுதான் ஒரே காரணம்.

குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் இத்தகைய பாதிப்புகளை அவர்கள் அதிகம் எதிர்கொள்கிறார்கள். வங்க மொழி பேசுபவர்கள் மற்றும் வங்கதேசத்தவர்கள் ஆகியோருக்கு இடையே வேறுபாடு இருப்பதை, சம்பந்தப்பட்ட மாநில காவல் துறை அதிகாரிகள் உணர்வதில்லை. இதனால், எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறார்கள்.

நமது அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளின்படி, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வசிக்கவும், வேலை செய்யவும், பயணம் செய்யவும் முழு உரிமை கொண்ட அந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக நடைபெறும் பாகுபாடு, வன்முறை மற்றும் துன்புறுத்தல்களைத் தடுக்க, நாட்டின் அனைத்து மாநில அரசுகளுக்கும் நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.

நமது நாட்டின் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும்’’ என தெரிவித்துள்ளார்.

Adhir
கலீதா ஜியா மறைவு: 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு; வங்கதேச அரசு அறிவிப்பு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in