“வாக்குக்காக சமூகங்கள் இடையே பிளவை உருவாக்குகிறது காங்கிரஸ்” - அசாமில் மோடி குற்றச்சாட்டு

தேயிலை தொழிலாளர்களுக்கு பட்டா வழங்கிய பிரதமர் மோடி

தேயிலை தொழிலாளர்களுக்கு பட்டா வழங்கிய பிரதமர் மோடி

Updated on
1 min read

கவுகாத்தி: வாக்குகளைப் பெற வேண்டும் என்ற தனது சுயநலத்துக்காக காங்கிரஸ் கட்சி பல்வேறு சமூகங்களிடையே பிளவுகளை உருவாக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

கோக்ரஜாரில் கூடியிருந்த மக்களுக்காக கவுகாத்தியில் இருந்தவாறு காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, ‘‘அசாமில் இருந்தும் நாட்டில் இருந்தும் காங்கிரஸ் கட்சியை நீங்கள் வெளியேற்றி, பாஜக -என்டிஏவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கினீர்கள். நீங்கள் அளித்த தீர்ப்பால் நாங்கள் எங்கள் முயற்சிகளை முழு மனதுடன் தொடங்கினோம்.

காங்கிரஸ் கட்சி தனது சுயநல அரசியலுக்காக பல்வேறு சமூகங்களிடையே பிளவுகளை விதைத்த வேளையில், பாஜக நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்காகப் பணியாற்றியது. இந்த மனப்பான்மையுடனேயே போடோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் முதன்முறையாக அனைத்து முக்கிய அமைப்புகளையும் குழுக்களையும் ஒன்றிணைத்தது.

காங்கிரஸ் என்பது பொய் வாக்குறுதிகளுக்கான கடை. ஒவ்வொரு பொய் வாக்குறுதியுடனும் அது நான்கு பெரும் பொய்களை போனசாக வழங்குகிறது. ஏனெனில், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அக்கட்சிக்கு துளியும் கிடையாது.

என்டிஏவின் இரட்டை இன்ஜின் அரசு அசாமின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், மாநிலத்தின் விரைவான வளர்ச்சியை உறுதி செய்வதிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. கோக்ரஜார் உட்பட இப்பகுதி முழுவதும் கடந்த சில பத்தாண்டுகளாக பெரும் இன்னல்களைச் சந்தித்தது. இதனால், பெரும் இழப்புகளுக்கு உள்ளானது. ஆனால், இன்று போடோலாந்து அமைதி மற்றும் வளர்ச்சிக்கான பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்று அசாம் அமைதி மற்றும் முன்னேற்றத்தின் புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறது.

2020-ம் ஆண்டில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. போலோ மொழிக்கு துணை அலுவல் மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. போடோலாந்து வளர்ச்சிக்காக ரூ. 1,500 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. இன்று கோக்ரஜாரில் ஒரு மருத்துவக் கல்லூரி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தங்கள் மகன்கள் வன்முறைப் பாதையில் இருந்து விலகி, தங்கள் குடும்பத்துடன் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்காக தாயகம் திரும்பி இருப்பதைக் கண்டு அவர்களின் அம்மாக்கள் அனைவரும் எங்களை மனதார வாழ்த்தி வருகிறார்கள்.

இன்று இப்பகுதியின் வளர்ச்சிக்காக ரூ.4,500 கோடிக்கும் அதிமான மதிப்புள்ள திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டு உள்ளன. மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இன்று போடோலாந்து அமைதி மற்றும் வளர்ச்சியின் பாதையில் பயணித்து வருகிறது’’ என தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>தேயிலை தொழிலாளர்களுக்கு பட்டா வழங்கிய பிரதமர் மோடி</p></div>
காஸ் சிலிண்டர் நிலவரம் கவலை அளிப்பதாக மத்திய அரசு விவரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in