

பொகாஜன் நகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். படம்: பிடிஐ
பொகாஜன்: அசாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி நேற்று வெளியிட்டார்.
அசாமில் 126 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பொகாஜன் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் மற்றும் பிற மூத்த தலைவர்களுடன் இணைந்து கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
நிர்வாகம், மாநிலத்தின் தனித்துவமான அடையாளம், சுகாதாரம், உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்மயமாக்கல், விவசாயம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மேம்பாடு, காலநிலை மாற்றம் மற்றும் பாதுகாப்பான அசாம் ஆகிய 11 துறைகளின் வளர்ச்சிக்கு தீர்மானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 29-ம் தேதி அசாம் சென்றிருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஐந்து வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தார். இதில் பெண்களுக்கு மாதாந்திர பணப் பரிமாற்றம், தொழில் தொடங்க பெண்களுக்கு கூடுதலாக ரூ.50,000 நிதியுதவி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் பணமில்லா மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
பொகாஜன் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரட்டன் எங்திக்கு ஆதரவாக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது: இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளார். ஊழலில் அவரும் அவரது குடும்பமும் முதலிடத்தில் உள்ளது. தேர்தலுக்கு பிறகு அமையும் காங்கிரஸ் அரசு இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கும்.
அசாமில் மூன்று பெரிய நிறுவனங்களுக்கு மொத்தம் 98,400 பிகா நிலம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா, ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகிய மூவரும் அசாமில் ஒரு நில ஏடிஎம்-ஐ உருவாக்கியுள்ளனர். அவர்கள் மக்களிடமிருந்து நிலத்தைப் பறித்து பெரிய தொழில் அதிபர்களுக்கு வழங்குகின்றனர். அதிகாரம் உள்ளூர் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலை. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.