யுபிஐ பரிவர்த்தனை கட்டண வசூல் பின்னணியில் அமெரிக்கா: காங்கிரஸ் குற்றச்சாட்டு

யுபிஐ பரிவர்த்தனை கட்டண வசூல் பின்னணியில் அமெரிக்கா: காங்கிரஸ் குற்றச்சாட்டு
Updated on
2 min read

புதுடெல்லி: யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் முடிவுக்குப் பின்னால் அமெரிக்கா உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இதுவரை கட்டணம் இல்லாமல் இருந்த நிலையை, வரி விதிப்பு மற்றும் பிற சட்​டங்​கள் (திருத்த) மசோ​தா மாற்றுகிறது. எதிர்காலத்தில் அனைத்து வகையான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிப்பதை இது எளிதாக்கும்.

இதன் சுமை இறுதியில் சாமானிய மக்கள் மீதே விழும். இனி அவர்கள் யுபிஐ செயலியைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

யுபிஐ முறையை நிதி ரீதியாக நிலைநிறுத்த இதுவே ஒரே வழி என்று மோடி அரசு கூறுவது முற்றிலும் தவறானது. யுபிஐ அமைப்பை நிதி ரீதியாக நிலைநிறுத்த, பராமரிக்க ரிசர்வ் வங்கியிடம் போதுமான நிதி ஆதாரம் உள்ளது.

2025-26-ல் ரிசர்வ் வங்கி ரூ.2.86 லட்சம் கோடி உபரி நிதியை அரசுக்கு மாற்றியது. இதில், ஒரு சிறிய பகுதி மட்டுமே, இந்த டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை பராமரிக்கப் போதுமானதாக இருக்கும்.

உண்மையில், இந்த திருத்தத்துக்குப் பின்னால் உள்ள காரணம் இன்னும் கவலைக்குரியதாக இருக்கலாம். யுபிஐ மற்றும் ரூபே ஆகியவை கட்டணமில்லாமல் பயன்படுத்தப்படுவதை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி விமர்சித்திருந்தார். இது விசா மற்றும் மாஸ்டர்கார்டு போன்ற அமெரிக்க கட்டணச் சேவை தளங்களை சந்தையில் இருந்து வெளியேற்றுவதாகவும் அவர் விமர்சித்திருந்தார். இதைத் தொடர்ந்தே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

பின்னணி என்ன? - பணப் பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம் 2007, வருமான வரிச்சட்டம் 2025, நிதிச் சட்டம் 2026 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில், வரி விதிப்பு மற்​றும் பிற சட்​டங்​கள் (திருத்த) மசோ​தா​ மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மசோதாவை மக்களவையில் இன்று (ஆக.6) தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது விவாதம் நடத்த ஆளும் கட்சி தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மசோதா விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

யுபிஐ மற்றும் பிற மின்னணு கட்டண முறைகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வங்கிகள் மற்றும் பிற சேவை வழங்குநர்களை அனுமதிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், பண பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம் 2007-ல் திருத்தங்களை மேற்காள்ள அரசு திட்டமிட்டுள்ளது.

மின்னணு கட்டண முறைகளுக்கு வங்கிகள் மற்றும் பிற சேவை வழங்குநர்கள் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் சட்ட விதியை இந்த திருத்தம் நீக்கும்.

இதன் மூலம், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் மற்றும் பிறசேவை வழங்குநர்களால் கட்டணம் விதிக்க முடியும். இந்த கட்டணம், தனி நபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளுக்கு இருக்காது என்றும், நுகர்வோர் - நிறுவனம், நிறுவனம் - நிறுவனம் இடையேயான பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஐ பரிவர்த்தனை கட்டண வசூல் பின்னணியில் அமெரிக்கா: காங்கிரஸ் குற்றச்சாட்டு
அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கான விசா 62% சரிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in