கோவை குண்டுவெடிப்பு தினம் - பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட குடியரசு துணைத் தலைவர் அழைப்பு

கோவை குண்டுவெடிப்பு தினம் - பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட குடியரசு துணைத் தலைவர் அழைப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: 1998ம் ஆண்டு இதே நாளில் கோயம்புத்தூரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை நினைவுகூர்ந்துள்ள குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பயங்கரவாதத்துக்கு எதிரான போாில் அனைவரும் ஒன்றுபட உறுதியேற்போம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘‘14 பிப்ரவரி 1998 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்த அப்பாவி மக்களை இந்நாளில் கனத்த மனதுடன் நினைவுகூர்ந்து எனது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். அது நம் தேசத்தின் வரலாற்றில் மறக்க முடியாத, இருண்ட பக்கமாகும்.

அன்று, எல். கே. அத்வானி அவர்கள் வந்திருந்த வேளையில் நிகழ்ந்த இந்த கொடூர குண்டுவெடிப்புகள், பல குடும்பங்களின் வாழ்வில் ஆறாத காயங்களை ஏற்படுத்தி, நம் நாட்டின் மனச்சாட்சியையே உலுக்கியது. அந்த நாளின் பயமும் பதற்றமும் நிறைந்த சூழ்நிலை இன்றும் என் நினைவில் ஆறாத வடுவாகப் பதிந்துள்ளது.

அந்த குண்டு வெடிப்புகளில் ஒன்றில் அன்று நான் மயிரிழையில் உயிர் தப்பினேன். குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்து காக்க போராடிய அந்த கொடிய நிமிடங்கள் என் வாழ்வின் துயரம் மிகுந்த காலங்கள்.

இந்நாளில் உயிரிழந்த ஒவ்வொரு ஆன்மாவையும் பணிவுடன் நினைவுகூர்ந்து, துயரத்தில் வாழும் குடும்பங்களுடன் ஒருமித்த உணர்வில் நின்று அவர்களது துயரங்களில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

இந்நாளில், அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒன்றுபட்டு நின்று, அமைதி, ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை காக்கும் வகையில் உறுதி எடுத்துக் கொள்வோம்’’ என தெரிவித்துள்ளார்.

கோவை குண்டுவெடிப்பு தினம் - பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட குடியரசு துணைத் தலைவர் அழைப்பு
“புதுச்சேரியில் என்டிஏ அரசு ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது!” - அமித் ஷா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in