கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் - டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்தது என்ன?

தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி முழக்கம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் - டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்தது என்ன?
Updated on
2 min read

புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆன்லைன் அரசியலில் இருந்து கள அரசியலுக்கு வந்துள்ள இந்த அமைப்பின் முதல் போராட்டம் குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரைச் சேர்ந்த அபிஜீத் தீப்கே என்ற இளைஞரால் ஆன்லைனில் தொடங்கப்பட்ட இந்த கட்சி, ஆன்லைன் மூலமாகவே வெகு வேகமாகப் பரவி நாடு தழுவிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இதன் சமூக ஊடக பக்கங்களில் வெகு சில நாட்களில் பல லட்சம் பேர் இணைந்து, இதற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியான பாஜகவின் எக்ஸ் சமூக ஊடக பக்கத்தை 87 லட்சம் பேர் பின்தொடரும் நிலையில், இந்த எண்ணிக்கையை தொடங்கிய நான்கே நாட்களில் கடந்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.

இதனால் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர். திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கினர்.

அமெரிக்காவில் இருந்த அபிஜீத் தீப்கே, கட்சிக்கு அதீத வரவேற்பு இருப்பதை அறிந்து அதனை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு படித்த இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பதை அறிந்த அவர், அதை மையமாக வைத்து ஒரு போராட்டத்தை நடத்த திட்டமிட்டார். அப்படி அவர் திட்டமிட்ட முதல் கள நிகழ்வுதான் இன்று நடைபெற்ற ஜந்தர் மந்தர் போராட்டம்.

இந்த போராட்டத்துக்கு டெல்லி காவல் துறையின் அனுமதி முன்பே பெறப்பட்டது. இதையடுத்து, இதில் பங்கேற்க வருமாறு சமூக ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த ஆர்வலர்கள் என பலரும் ஜந்தர் மந்தரில் காலை முதலே குவியத் தொடங்கினர்.

அமெரிக்காவில் இருந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, போராட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்று காலை புதுடெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் போராட்டக் களத்துக்கு வந்தபோது, மிகுந்த உற்சாகமடைந்த போராட்டக்காரர்கள், தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பலர் கரப்பான்பூச்சி முகமூடிகளை அணிந்தும், கைகளில் பூக்களை ஏந்தியும் இருந்தனர். பள்ளி மாணவர்கள் பலரும்கூட தங்கள் பெற்றோருடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய அபிஜீத் தீப்கே, “நான் விமானத்தில் இருந்து தரையிறங்குவதற்கு சற்று முன்பு, சுதந்திரத்துடன் கழிக்கும் கடைசி தருணங்களை உணர்வது போல எனக்கு இருந்தது. என்றாலும், எனது சுதந்திரத்தை தியாகம் செய்ய நான் முழுமையாக தயாராக இருந்தேன். சிறைவாசம் குறித்த அச்சத்தின் காரணமாக பலர் சமரசம் செய்து கொண்டு தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுத்தனர். ஆனால், இந்த நாட்டின் மாணவர்களும் இளைஞர்களும் விலைபோகவில்லை.

தோழர்களே, இது மிக நீண்ட போராட்டம். அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென சமூக வலைதளங்கள் மூலம் கடந்த ஒரு மாத காலமாக நாம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதற்கு செவி கொடுக்காதவர்கள், நமது பதிவுகளை நீக்குவது, கணக்குகளை முடக்குவது, ஹேக் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் நமது பதிவுகளை வேண்டுமானால் நீக்கலாம். ஆனால், இந்தப் பொதுவெளியில் இருந்து எங்களை அவர்களால் துடைத்தெறிய முடியாது" என தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற சோனம் வாங்சுக், அபிஜீத் தீப்கே ஒருவேளை கைது செய்யப்பட்டால் ஆறு வார கால உண்ணாவிரதத்தை மேற்கொள்வேன் என தெரிவித்தார். காலை 10 மணி முதல் அமைதியான முறையில் நடந்த இந்த போராட்டம் மாலை 4.30 மணி அளவில் நிறைவடைந்தது.

முன்னதாக, இந்த போராட்டத்தை முன்னிட்டு ஜந்தர் மந்தரில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மகாராஷ்டிராவில் உள்ள அபிஜீத் தீப்கேவின் இல்லத்திலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். அசம்பாவித சம்பவம் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் - டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்தது என்ன?
‘கண்ணியற்ற நடத்தை...’ - லண்டனில் தலைமை நீதிபதி நிகழ்வு சலசலப்புக்கு இந்திய தூதரகம் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in