

குவாஹாட்டி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) அறிவித்துள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா கைது செய்யப்பட்டார்.
அசாம் மாநிலத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் முதலாவது மண்டல தொண்டர்கள் கூட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா உள்ளிட்ட பல தலைவர்கள் மற்றும் தொண்டர்களை அம்மாநில காவல் துறையினர் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.
அசுதோஷ் ரங்கா வெளியிட்ட வீடியோவில், “அசாம் மாநிலப் பள்ளிகளின் நிலைமை, மனித தவறுகளால் ஏற்படும் வெள்ளப் பெருக்கு போன்ற பிரச்சினைகளை நாங்கள் அம்பலப்படுத்திவிடுவோம் என்பதால் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பயந்து கொண்டு எங்களைக் கைது செய்துவிட்டார்.
அத்துடன் எங்கள் உறுப்பினர்களையும் அவர் மிரட்டியுள்ளார். ஆனால், இந்த மண்ணின் மக்களை எளிதில் பயமுறுத்திவிட முடியாது” என்று கூறியுள்ளார். காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.