

கொல்கத்தா: மேற்குவங்கத்தில், முதல்வர் சுவேந்து அதிகாரியின் கொலை செய்யப்பட்ட தனி உதவியாளரின் தாயார், நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, மே 6-ம் தேதி சுவேந்து அதிகாரி முதல்வராக பதவியேற்றார். சுவேந்து பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு 3 நாட்களுக்கு முன்பு அவரது தனி உதவியாளராக இருந்த சந்திரநாத் ராத் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த தேர்தலில் முதல்வர் சுவேந்து அதிகாரி நந்திகிராம், பவானிபூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் நந்திகிராம் தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து, வரும் அக்.6-ம் தேதியன்று நந்திகிராம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் சுவேந்து அதிகாரியின் முன்னாள் தனி உதவியாளர் சந்திரநாத் ராத்தின் தாயார் ஹசிராணி ராத் நந்திகிராம் தொகுதியின் பாஜக வேட்பாளராக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நந்திகிராம் தொகுதியில் ஹசிராணி ராத் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு அவருக்கு ஆதரவாக, முதல்வர் சுவேந்து அதிகாரி பிரச்சாரம் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.