

கோவா தீ விபத்து
அர்போரா: வடக்கு கோவாவில் உள்ள ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து அந்த விடுதியின் உரிமையாளர் சவுரப் லூத்ரா முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
கோவாவின் அர்போரா பகுதியில் ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ என்ற கேளிக்கை விடுதியில் நேற்று அதிகாலையில் காஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 50 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த தீவிபத்துக்குப் பின்னர் முதன்முறையாக விடுதியின் உரிமையாளர் சவுரப் லூத்ரா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், “ எங்கள் நிர்வாகம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மிகுந்த நேர்மையுடன் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
பிர்ச்சில் ஏற்பட்ட துரதிர்ஷ்டமான சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட துயரமான உயிரிழப்பால் எங்கள் நிர்வாகம் ஆழ்ந்த துயரத்தில் உள்ளது. இது ஈடுசெய்ய முடியாத துக்கம். இறந்தவர்களின் குடும்பங்களுடனும், காயமடைந்தவர்களுடனும் எங்கள் நிர்வாகம் அசைக்க முடியாத ஒற்றுமையுடன் நிற்கிறது. அவர்களுக்கு சாத்தியமான அனைத்து வகையான உதவிகளையும், ஆதரவையும், ஒத்துழைப்பையும் எங்கள் நிறுவனம் வழங்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கோவா தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த கிளப்பின் மூன்று பொது மேலாளர்கள் மற்றும் ஒரு பார் மேலாளர் உட்பட நான்கு பேர், உள்ளூர் நீதிமன்றத்தால் மாநில காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். உரிமையாளர்களான சவுரவ் லூத்ரா மற்றும் கவுரவ் லூத்ரா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவா காவல்துறை இயக்குநர் அலோக் குமார் தெரிவித்தார். விடுதி உரிமையாளர்கள் கவுரவ் லூத்ரா, சவுரப் லூத்ரா தலைமறைவாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவா அரசு மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை, தடயவியல், தீயணைப்பு மற்றும் அவசர சேவைகளின் உயர் அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டுள்ளார்.