“விஸ்வகுருவால் ஒரு தேர்வை கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை” - மோடியை சாடிய ராகுல்

“விஸ்வகுருவால் ஒரு தேர்வை கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை” - மோடியை சாடிய ராகுல்
Updated on
1 min read

புதுடெல்லி: “விஸ்வகுரு என்று சொல்லிக் கொள்பவரால் ஒரே ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை. நாட்டின் கல்வி அமைப்பை அவர் முழுமையாக சிதைத்துவிட்டார்” என பிரதமர் நரேந்திர மோடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

நாடு முழுவதும் இன்று சியுஇடி-யுஜி (CUET-UG) தேர்வு நடந்தது. இதில் பரவலாக பல மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “நீட், சிபிஎஸ்இ, எஸ்எஸ்சி, இன்று சியுஇடி. 4 தேர்வுகள். ஒரு கோடி மாணாக்கர். ஒன்றைக் கூட நேர்மையாக நடத்த முடியவில்லை.

விஸ்வகுரு என்று சொல்லிக் கொள்பவரால் நாட்டில் ஒரே ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை. மோடி, இந்த தேசத்தின் கல்வி அமைப்பை ஒட்டுமொத்தமாக சிதைத்துவிட்டார்.

நீங்கள் எந்த இளம் தலைமுறையினர் எதிர்காலத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அவர்களே இதற்கெல்லாம் உங்களை பொறுப்பேற்க வைப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் இளநிலை க்யூட் 2026 தேர்வுகள் நேற்று முதல் நடைபெறுவதாக இருந்தது. பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டதால், நேற்று முதல் நடைபெறுவதாக இருந்த இளநிலை க்யூட் தேர்வை மே 31, ஜூன் 6 மற்றும் ஜூன் 7-ம் தேதிகளுக்கு தேசிய தேர்வு முகமை மாற்றப்பட்ட இன்று தொடங்கியது.

ஜூன் 6 மற்றும் 7-ம் தேதி தேர்வு எழுதுபவர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் விரைவில் வெளியிடப்படும். அப்போது, அதை cuet.nta.nic.in என்ற இணையளத்தில் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

இந்நிலையில், இன்று தேர்வு நடந்த மையங்களில் சிலவற்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை சுட்டிக் காட்டியே ராகுல் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

முன்னதாக நேற்று ராகுல் காந்தி, “சிபிஎஸ்இ ஓஎஸ்எம் முறை குளறுபடியில் கல்வி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடி, தனது அரசைக் காப்பாற்றுவதில் தான் உறுதியாக இருக்கிறாரே தவிர நாட்டின் லட்சக்கணக்கான மாணவர்கள் பற்றி அவருக்குக் கவலையில்லை” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

“விஸ்வகுருவால் ஒரு தேர்வை கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை” - மோடியை சாடிய ராகுல்
MAI: கடந்து போகும் காதலில் ‘மய்’ பகிரும் பிரேக்-அப் பாடம் | திரை தேவதைகள் 19

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in