

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே
புதுடெல்லி: எங்களை கரப்பான் பூச்சிகள் என்று அழைத்த தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு நன்றி என்று அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார். சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே நேற்று கூறும்போது, “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்துக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
அவர் எங்களைக் கரப்பான்பூச்சிகள் என்று அழைக்காமல் இருந்திருந்தால், நான் இந்தியாவுக்கு வந்திருக்க மாட்டேன். இந்த இயக்கத்தை தொடங்கி இருக்க மாட்டேன்” என்றார்.
தனக்கு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து வழங்க டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக் கோரி ஒருவர் தாக்கல் செய்த மனு மீது, கடந்த மே 15-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
அப்போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் “வேலை இல்லாத இளைஞர்கள் சிலர், சமூக ஊடகங்களில் தேவையில்லாத கருத்துகளைப் பரப்புகின்றனர். சமூக ஆர்வலர்கள் என்று கூறி கொள்ளும் அவர்கள், கரப்பான் பூச்சிகளைப் போன்றவர்கள்” என்று கருத்து தெரிவித்தார்.
அந்த வழக்கறிஞரின் சமூக வலைதளப் பதிவுகளைக் கண்டித்த தலைமை நீதிபதி, துறையில் முறையான வேலைவாய்ப்பும் இடமும் இல்லாமல் போலிச் சட்டப் பட்டங்களைப் பெற்றுக்கொண்டு, சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் அமைப்புகளைத் தாக்குபவர்களைக் குறிப்பிடும் வகையில் அந்த உவமையைப் பயன்படுத்தினார். இந்தக் கருத்து சமூக ஊடகத்தில் வேகமாக பரவியது.
புதிய அமைப்பு தொடக்கம்
அடுத்த நாள் மே 16-ம் தேதி, அமெரிக்காவில் இருந்த அபிஜித் திப்கே, ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ தொடங்கப்பட்டதாக எக்ஸ் தளத்தில் அறிவித்தார். மேலும், இந்த அமைப்பில் இணைய வேலைவாய்ப்பற்றவராகவும், சோம்பேறியாகவும், எப்போது இணையத்தில் இருப்பவராகவும், தொழில்முறையாகக் குதர்க்கமாகப் பேசக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து, கரப்பான்பூச்சி பெயரில் சமூக வலைதளங்களில் பல்வேறு ஆதரவு கருத்துகள் வந்தன. அதன்பின், நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் போராட்டம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.