

செல்வ குமாரிக்கு தலைமை நீதிபதி பாராட்டு
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், ‘சட்டத்தின் குரல்’ எனும் தமிழ் நூலை எழுதிய வழக்கறிஞர் செல்வ குமாரியைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கினார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் செல்வ குமாரி பல்வேறு சட்ட விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். இதன் தொகுப்பு ’சட்டத்தின் குரல்’ எனும் பெயரில் தமிழ் நூலாக சமீபத்தில் வெளியானது.
டெல்லியில் நடைபெற்ற இதற்கான விழாவில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் நீதிபதி.டி.ராஜு, நீதிபதி.எம்.கற்பகவிநாயகம், நீதிபதி.எஸ்.நாகமுத்து, நீதிபதி.எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் மூத்த வழக்கறிஞரும் திமுக எம்பியுமான வில்ஸன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நேற்று இந்திய அரசியலமைப்பு நாள் விழாவை நடத்தியது. இதில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கலந்து கொண்டார்.
அப்போது அவர், மூத்த வழக்கறிஞரான செல்வகுமாரி எழுதிய தமிழ் நூலை அங்கீகரிக்கும் வகையில் கவுரவப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இவ்விழாவில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் விகாஷ் சிங் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.