ராகுல் காந்திக்கு தோல்விகளின் சதம் காத்திருக்கிறது: அசாமில் பிரதமர் மோடி பேச்சு

ராகுல் காந்திக்கு தோல்விகளின் சதம் காத்திருக்கிறது: அசாமில் பிரதமர் மோடி பேச்சு
Updated on
2 min read

கோகாமுக்: அசாமில் 3-வது முறையாக தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி அமையும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் சுய பிரகடன இளவரசருக்கு தோல்விகளின் சதம் காத்திருக்கிறது என்று விமர்சித்தார்.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி கோகாமுக் பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘முதலில் சர்பானந்த சோனாவால் தலைமையிலும் பின்னர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலும் அசாமில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த 10 ஆண்டுகால ஆட்சியில், அசாம் ஒரு புதிய சேவை மற்றும் நல்லாட்சிக்கான சகாப்தத்தைக் கண்டுள்ளது. வளர்ந்த இந்தியாவை கட்டமைக்க வளர்ந்த அசாமை உருவாக்குவதற்கான தேர்தல் இது. இம்முறையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்பது உறுதி. அதேபோல், காங்கிரஸ் கட்சிக்கும் மூன்றாவது முறையாக தோல்வி கிடைப்பது உறுதி. காங்கிரஸ் கட்சியின் சுய பிரகடன இளவரசருக்கு 100-வது தோல்வி காத்திருப்பதும் உறுதியாகிவிட்டது.

அசாம் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு இதுவே எனது முதல் பொதுக்கூட்டம். இங்கு திரண்டுள்ள மக்கள் கடலே, நாங்கள் மூன்றாவது முறையாக வெற்றி பெற இருக்கிறோம் என்பதற்கான சான்று. உங்கள் ஆசியுடன் நான் மூன்றாவது முறையாக பிரதமரானேன். இந்த திடலுக்கு நான் வருகை தருவது இது மூன்றாவது முறை. உங்கள் ஆசியுடன் அசாமில் நாங்கள் மூன்றாவது முறை வெற்றி பெறுவோம்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 22 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உறுதியான வீடுகளை பெற்றுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் வீடு கிடைக்காத குடும்பங்களுக்கு கண்டிப்பாக வீடு கட்டித்தரப்படும். பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளின்படி, இத்திட்டத்தின் கீழ் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும். ஏழை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மழலையர் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும்.

பெண் லட்சாதிபதிகள் திட்டத்தின் கீழ் அசாமில் ஏற்கனவே சுமார் 3 லட்சம் பெண்கள் லட்சாதிபதிகளாகி உள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் பெண்களை லட்சாதிபதிகளாக ஆக்க நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம்’’ என தெரிவித்தார்.

முன்னதாக, அசாமின் திப்ருகரில் அமைந்துள்ள ஒரு தேயிலை தோட்டத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவர் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய அவர், மாநிலத்தின் தேயிலைத் துறைக்கு அவர்கள் ஆற்றி வரும் பங்களிப்புக்கு பாராட்டு தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரதமர் மோடி</p></div>

தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரதமர் மோடி

அசாமில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. அசாமில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அசாம் கனபரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மூன்றாவது முறையாக வெற்றி பெற தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரம் காட்டி வரும் அதேநேரத்தில், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்திக்கு தோல்விகளின் சதம் காத்திருக்கிறது: அசாமில் பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவில் விமான எரிபொருள் விலை இரு மடங்கு அதிகரிப்பு: 1000 லிட்டர் ரூ.2.07 லட்சமாக உயர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in