பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? - அதிரடி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் மத்திய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? - அதிரடி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் மத்திய அரசு
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு ஆசியப் போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள போதிலும், இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாதம் சுமார் ரூ.30,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு வாங்கி, உள்நாட்டில் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் நிறுவனங்களின் நிதிநிலை பெரும் நெருக்கடியில் உள்ளது" என்று பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா விளக்கமளித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் தேவையைக் குறைப்பதற்காகப் பின்வரும் நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்படலாம் என தெரிகிறது:

விலை உயர்வு: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதன் மூலம் அதன் தேவையைக் கட்டுப்படுத்துதல்.

வீட்டிலிருந்தே வேலை: அலுவலக ஊழியர்களில் 50% பேரை வீட்டிலிருந்தே வேலை செய்யப் பணித்தல்.

பொதுப் போக்குவரத்து: அரசு அதிகாரிகள் மெட்ரோ மற்றும் பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல்.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற சூழலில் ஹாங்காங், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் எரிபொருள் விலையை 20-30% வரை உயர்த்தியுள்ளன.

அண்டை நாடுகளான வங்கதேசம் எரிபொருள் பங்கீட்டு முறையையும், இலங்கை வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற முறையையும் அமல்படுத்தியுள்ளன. இலங்கையில் வாரத்தில் நான்கு நாள் பணி நடைமுறை அமல்படுத்தப்பட்டதுடன், ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கட்டாய எரிபொருள் பாஸ் முறையையும் அறிமுகப்படுப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தனது அரசு அலுவலகங்களை நான்கு நாள் பணி நடைமுறைக்கு மாற்றியுள்ளது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88% இறக்குமதியையே நம்பியிருப்பதால், பொருளாதாரத்தைப் பாதுகாக்க இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவை என்று அமைச்சகம் கருதுகிறது. இது குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் புதிய விலைப் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? - அதிரடி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் மத்திய அரசு
“தங்கம் வாங்குவதை தள்ளிப்போடுவீர்” - மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in