

புதுடெல்லி: ”மேற்கு ஆசிய போரின் பாதிப்புகள் நீண்டகாலம் நீடிக்கும். இதனால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க மத்திய அரசு உரிய முயற்சிகளை எடுத்து வருகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசிய போர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நேற்று முன்தினம் விளக்கம் அளித்தார். இதே விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று அவர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மேற்கு ஆசிய போரால் (அமெரிக்கா- ஈரான்) உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயு, உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
மேலும் வளைகுடா நாடுகளில் வாழும் ஒரு கோடி இந்தியர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலை கொள்கிறோம். ஹார்முஸ் ஜலசந்தியில் ஏராளமான கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களின் பாதுகாப்பு குறித்தும் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டிருக்கிது. மேற்கு ஆசிய போர் நீண்ட நாட்கள் நீடித்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். எனவே, போரை முடிவுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
போர் காரணமாக வளைகுடா பகுதியில் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியிருக்கிறது. எனவே உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறோம். கடந்த சில நாட்களாக எண்ணெய், சமையல் காஸ் கப்பல்கள் இந்தியாவுக்கு அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன.
ரூ.70,000 கோடியில் சரக்கு கப்பல்: இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயில் சுமார் 90% வெளிநாட்டு கப்பல்களில் கொண்டு வரப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு ரூ.70,000 கோடியில் இந்தியாவில் சரக்கு, எண்ணெய் கப்பல்கள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
மேற்கு ஆசிய போரால் சர்வதேச பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து மீள மிக நீண்ட காலம் ஆகும். கரோனா பெருந்தொற்று காலத்தில் எழுந்த சவால்களை எதிர்கொள்ள சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இதேபோல மேற்கு ஆசிய போரால் எழுந்துள்ள சவால்களை சமாளிக்க 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
பெட்ரோல், டீசல் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. விவசாயிகளுக்கு தடையின்றி உரங்கள் விநியோகம் செய்யப்படும். புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் பேசினார்.