

புதுடெல்லி: கடற்படையை விரிவுப்படுத்த ரூ.40,000 கோடியில் 8 அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்கும் திட்டத்துக்காக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்), இந்திய கடற்படைக்காக 8 அதிநவீன போர்க்கப்பல்களைக் கட்டுவதற்கு ரூ.40,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய கடற்படையை விரிவுப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை, கொல்கத்தாவைத் தளமாகக் கொண்ட ‘கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அன்ட் இன்ஜினியர்ஸ்’ (ஜிஆர்எஸ்இ) மற்றும் கோவாவில் உள்ள ‘கோவா ஷிப்யார்ட் லிமிடெட்’ (ஜிஎஸ்எல்) ஆகிய இரண்டு முக்கிய பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இவ்விரு நிறுவனங்களுடன் அரசு விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: புதியதாக தயாரிக்கப்படும் 8 போர்க்கப்பல்களும் அதிவேக மேற்பரப்புப் போர்க்கப்பல்களாக இருக்கும். இவற்றின் வேகம் சுமார் 30 நாட்ஸ் ஆக இருக்கும். முதல் போர்க்கப்பல் 2030-க்குள் ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுமான கால அட்டவணையை விரைவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
8 கப்பல்களும் இந்தியாவிலேயே கட்டப்படுவது, உள்நாட்டு கப்பல் கட்டும் திறன்களை ஆதரிப்பதோடு, நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி சூழலமைப்பையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிநவீன போர்க்கப்பல்கள் பல்வேறு கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்திறன் கொண்ட, தகவமைத்துக் கொள்ளக்கூடிய, பல்திறன் கொண்ட தளங்களாக இருக்கும். இக்கப்பல்களின் சேர்க்கை, முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் பகுதியான இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் இந்தியக் கடற்படையின் போர் தயார்நிலையையும் செயல்பாட்டு இருப்பையும் வலுப்படுத்தும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.