

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நீதிமன்ற உள்கட்டமைப்பு, மேம்பாட்டிற்காக கடந்த 2011-ம் ஆண்டு முதல் ரூ.9,800 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. ஆனாலும், உச்ச நீதிமன்றத்தில் 10,000-க்கும் அதிகமான வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. இதில் 558 வழக்குகள் 20 ஆண்டுகளையும், 26 வழக்குகள் 30 ஆண்டுகளையும் கடந்துவிட்டன.
அதேவேளையில், நாட்டின் 25 உயர் நீதிமன்றங்களில் 80,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேங்கிக் கிடக்கின்றன. போதிய நீதிபதிகள் மற்றும் பணியாளர்கள் இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வழக்குகளின் சிக்கலான தன்மையே விசாரணை வேகத்தைத் தீர்மானிக்கின்றன.
தற்போது உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட 1,122 நீதிபதி பணியிடங்களில் 341 இடங்கள் காலியாக உள்ளன. அதேபோல, கீழமை நீதிமன்றங்களில் உள்ள 30,868 அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 7,311 இடங்கள் காலியாக உள்ளன. நீதிபதிகளை நியமிப்பதில் உயர் நீதிமன்ற கொலீஜியங்கள் காட்டும் தாமதமே இதற்குக் காரணமாக அமைகிறது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து வைப்பதற்காக, 25 உயர் நீதிமன்றங்களிலும் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலும் ‘நிலுவை வழக்குகள் தீர்வுக்குழுக்கள்’ அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்கும் நோக்கில் அரசு பல்வேறு முக்கியச் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, 2023-ம் ஆண்டின் புதிய குற்றவியல் சட்டங்கள், காசோலை உள்ளிட்ட மாற்றுமுறை ஆவணங்கள் திருத்தச் சட்டம் (2018), வணிக நீதிமன்றங்கள் திருத்தச் சட்டம் (2018) மற்றும் குறிப்பிட்ட பரிகாரத் திருத்தச் சட்டம் (2018) ஆகியவை இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.