

ராஞ்சி: ஜார்க்கண்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதைக் கண்டித்து ராஞ்சியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 20-வது நாளை எட்டியது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ராஞ்சியில் உள்ள சட்டப்பேரவையை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றபோது பதற்றம் அதிகரித்தது. அப்போது போராட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
இதனிடையே, ஒரு வாரத்துக்குள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக முன்னாள் முதல்வர் ரகுவர் தாஸ் நேற்று முன்தினம் எச்சரித்தார்.
இந்நிலையில், சட்டப்பேரவையை நோக்கி நடைபெற்ற பேரணியில் பங்கேற்றதாக 600 பேர் மீது காவல் துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 100 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அடையாளம் தெரியாத 500 மாணவர்கள் மற்றும் பிற போராட்டக்காரர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.