

புதுடெல்லி: சூரி பயாலா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம், 2023-ல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
குறிப்பாக, தேர்தல் ஆணையச் சட்டத்தின் பிரிவு 6-ன் படி, ஒவ்வொரு காலிப் பதவிக்கும் தலா 5 பேர் கொண்ட பெயர் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என சட்டம் கூறுகிறது.
ஆனால், இங்கு அவ்வாறு பட்டியல் தயார் செய்யப்படவில்லை என்றும், நியமிக்கப்பட்ட அதிகாரிகள் யாரும் இதற்கு முன் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொண்டதில்லை என்றும், சட்டப்பிரிவு 5-ல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி வரம்புகளை அவர்கள் பூர்த்தி செய்யவில்லை என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
எனவே, அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தங்களது பதவிகளில் தொடரச் சட்டப்பூர்வ அதிகாரம் என்ன என்பதை விளக்க உத்தரவிடும் வகையில் “கோ வாரண்டோ” பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.