

புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎப்ஓ) வாரியக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், பி.எஃப். கணக்குகளில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகையை 10 சதவீதமாகக் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தற்போதைய விதிமுறைகளின்படி, பி.எஃப். கணக்கிலிருந்து பகுதியளவு பணத்தைத் திரும்பப் பெறும்போது, உறுப்பினர்கள் தங்களது பி.எஃப். இருப்புத் தொகையில் குறைந்தபட்சம் 25 சதவீதத்தை கணக்கில் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச இருப்புத் தொகையை 10 சதவீதமாகக் குறைக்கும் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், பணம் எடுக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உறுப்பினர்கள் தங்களது பி.எஃப். சேமிப்பில் இருந்து 90 சதவீதம் வரை பணம் எடுக்க முடியும்.
தவணைமுறை திட்டம்
சேமிப்புத் தொகையை தவணை முறையில் திரும்பப் பெறும் திட்டத்துக்கு (SWP) பிஎஃப் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், ஓய்வுபெறும் உறுப்பினர்கள் தங்களது பி.எஃப். சேமிப்புத் தொகையை மொத்தமாக ஒரே நேரத்தில் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, தவணை முறையில் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தப் புதிய வசதி நடைமுறைக்கு வந்தால், ஓய்வுபெற்றவர்கள் தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் வருமானம் பெற முடியும். அதே நேரத்தில், கணக்கில் எஞ்சியிருக்கும் பி.எஃப். தொகைக்கு தொடர்ந்து வட்டி கிடைக்கும்.