மும்பை வீதிகளில் யாசகராக மாறிய பாஜக எம்எல்ஏ - வீடியோ வைரல்

மும்பை வீதிகளில் யாசகராக மாறிய பாஜக எம்எல்ஏ - வீடியோ வைரல்
Updated on
1 min read

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தின் மிகவும் பணக்கார சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பாஜகவை சேர்ந்த பராக் ஷா, மும்பை வீதிகளில் யாசகர் வேடமிட்டுப் பிச்சை எடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

காட்கோபர் (கிழக்கு) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பராக் ஷா, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஆவார். கடந்த 2024 மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் தனது சொத்து மதிப்பு ரூ.3,383 கோடிக்கும் மேல் எனப் படிவத்தில் குறிப்பிட்டு, மாநிலத்தின் பணக்கார வேட்பாளராகக் களம் கண்டவர். ஜெயின் மத மரபில் சிறப்பு மாதமாகக் கருதப்படும் இக்காலகட்டத்தில், தனது ஆன்மீக குருவின் அறிவுறுத்தலின்படி இவர் இந்த விசித்திர முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

தனது பாதுகாப்பு அதிகாரிகள், ஆடம்பரக் கார்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களைத் துறந்து, சிறப்பு மேக்கப் மூலம் அடையாளம் தெரியாதவாறு தோற்றத்தை மாற்றிக்கொண்டார். பின்னர் மும்பை வீதிகளில் இறங்கி பல மணி நேரம் பிச்சைக்காரராகவே வாழ்ந்துள்ளார்.

வீதி ஓரத்தில் அமர்ந்து பிச்சை எடுத்து, கிடைத்த உணவை உட்கொண்ட பிறகு, தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ள அவர், "சமூகத்தில் நமது அந்தஸ்து என்னவென்று தெரியாதபோது மனிதர்கள் நம்மிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை இது எனக்கு உணர்த்தியது.

நாம் மக்கள் பிரதிநிதியாக இருக்கும்போது மரியாதை கொடுத்து நம்மைச் சுற்றி வரிசையில் நிற்கும் அதே மனிதர்கள், இந்த அவதாரத்தில் நான் சென்றபோது என்னை விட உயரமானவர்களாக மாறி நின்றார்கள். இதுதான் வாழ்க்கையின் நிதர்சனம்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் மும்பை மக்களின் மனிதநேயத்தைப் பாராட்டிய அவர், ஒரு நபர் தமக்கு ரூ.20 கொடுத்து உணவு வாங்கிச் சாப்பிடச் சொன்னதாகவும், ஒரு சமோசா வியாபாரி தன்னிடம் பணம் இல்லை என்று தெரிந்த பின்னரும் புன்னகையுடன் இலவசமாகச் சமோசா வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை வீதிகளில் யாசகராக மாறிய பாஜக எம்எல்ஏ - வீடியோ வைரல்
ஹார்முஸ் பாதுகாப்புச் செலவை பிற நாடுகள் அமெரிக்காவுக்கு தர வேண்டும்: ட்ரம்ப் கெடுபிடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in