எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க நாடு தழுவிய தீவிர பிரச்சாரத்துக்கு பாஜக திட்டம்

எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க நாடு தழுவிய தீவிர பிரச்சாரத்துக்கு பாஜக திட்டம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. இதுதொடர்பாக பாஜக நடத்தவிருக்கும் நாடு தழுவிய பிரச்சாரத்தில் அதன் எம்எல்ஏ, எம்பிக்கள் கலந்து கொள்கின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், அதன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும் எதிராக எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாஜக நாடு தழுவிய பிரச்சாரத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இப்பிரச்சாரத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பொதுமக்களிடம் வீடு வீடாகச் சென்று, இந்த விவகாரம் குறித்த உண்மைத் தகவல்களை எடுத்துரைக்க உள்ளனர். இதற்காக 24 பக்கங்கள் அடங்கிய ஒரு சிறிய கையேட்டை பாஜக தயாரிக்கிறது. அதில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் விரிவாக விளக்கப்பட உள்ளன.

இந்தக் கையேட்டில் குறிப்பாக, ’தேர்தல் ஆணையத்தின் இத்தகைய செயல்பாடுகள் ஏன் அவசியம்? கடந்த காலங்களில் இவை எப்போது மேற்கொள்ளப்பட்டன? வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்களை மீண்டும் எவ்வாறு சேர்ப்பது? வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறை என்ன? தேர்தல் ஆணையத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் என்ன கூறுகின்றன?’ போன்ற கேள்விகளுக்கு பாஜக விளக்கம் அளிக்கவுள்ளது.

இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சியையும் பாஜக குறிவைக்கத் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில், தேர்தல் ஆணையர்களை நியமித்தது மற்றும் தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட தவறான முடிவுகளையும் அம்பலப்படுத்த பாஜக தயாராகி வருகிறது. இந்த உண்மைகள் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பை மக்கள் முன் அம்பலப்படுத்தும் என்பது பாஜகவின் எதிர்பார்ப்பாக உள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி, பிற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணைந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறார். அவர் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் தடுத்ததால், ஆகாஷ்வாணி பவன் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது தேசத்துக்கு எதிராக எதிர்கட்சிகளின் தவறான நடவடிக்கைகள் எனக் கூறி, பாஜகவின் மூத்த மத்திய அமைச்சர்கள் நாடு முழுவதும் செய்தியாளர் சந்திப்புகளையும் நடத்த உள்ளனர். இந்த பிரச்சாரம் சமூகவலைதளங்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு வழிகள் மூலமாகவும் முன்னெடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் தமது தகவல்கள் அதிகப்படியான மக்களைச் சென்றடைந்து, கட்சியின் நிலைப்பாட்டை பொதுமக்களிடம் முன்வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க நாடு தழுவிய தீவிர பிரச்சாரத்துக்கு பாஜக திட்டம்
“தவெக இப்போது ‘பிரேக்கிங் பேட்’ பார்ட்டி” - ‘மெத்’ கடத்தல் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in