

புதுடெல்லி: இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தவும் இ-20 எரிபொருளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு எரிபொருளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக உ.பி.யை சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்.பி. பிரிஜ் லால் கூறியதாவது: இ-20 பெட்ரோல் பாதுகாப்பானது. இதற்கு எதிராக தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. என்னிடமும் ஒரு வாகனம் உள்ளது. நானும் இதே எரிபொருளைத்தான் பயன்படுத்துகிறேன். ஆனால் எனது வாகனம் இதுவரை எந்தப் பிரச்சினையையும் சந்தித்ததில்லை.
இந்த எரிபொருள் பயன்பாட்டால் எனது வாகனத்தின் மைலேஜ் 3 முதல் 4 சதவீதம் வரை குறைவது உண்மைதான். ஆனால் இந்த எரிபொருள் நாட்டுக்கு பெரும் தொகையை சேமிக்கும். நமது எரிபொருள் தேவையில் 80 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்கிறோம். இதில் 20 சதவீதம் எத்தனாலை கலப்பதன் மூலம், வெளிநாடுகளுக்குச் செல்லும் பணத்தை நம்மால் சேமிக்க முடியும்.
இந்த எரிபொருளுக்கு எதிரான விமர்சனங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இதை எதிர்ப்பவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள். அவர்கள் வெளிநாட்டு சக்திகளால் இயக்கப்படுபவர்கள். இ-20 பெட்ரோல் முற்றிலும் பாதுகாப்பானது. இவ்வாறு பிரிஜ் லால் கூறினார்.