

போபால்: சம்பல் பள்ளத்தாக்கின் கொள்ளைக்காரனாக வலம் வந்து என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ராம் பாபு கதாரியா தனது இன்ப, துன்பங்களில் பங்கெடுத்த சிறந்த நண்பர் என்று பாஜக எம்எல்ஏ புகழ்ந்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அகில்யா பாய் ஹோல்கரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக பிச்சோர் பகுதியில் பால்- பாகேல் சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். மேடையில் அச்சமூகத்தின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கலைக் குழுவினர் பங்கேற்றனர்.
ஆனால், அங்கு வந்திருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அகில்யா பாய் ஹோல்கரின் உருவப் படத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு புகைப்படம் தான். அது, சம்பல் பள்ளத்தாக்கின் மிகக் கொடூரமான கொள்ளைக்காரர்களில் ஒருவரான ராம் பாபு கதாரியாவின் புகைப் படமாகும்.
அகில்யா பாய் ஹோல்கரின் படத்திற்கு மட்டுமின்றி, ராம்பாபு கதாரியாவின் படத்திற்கும் மாலைகள் அணிவித்து பாஜக எம்எல்ஏ பிரீத்தம் லோதி பேசியதாவது: ராம் பாபு கதாரியாவுக்கும் எனக்கும் தனிப்பட்ட உறவு இருந்தது. நாங்கள் இருவரும் இன்ப, துன்பங்களில் ஒன்றாகப் பங்கெடுத்த தோழர்கள். பெண் ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஆயிரக் கணக்கான மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினோம்.
ஒரு ரவுடி, கொள்ளைக்காரனுக்கு உதவுகிறான் என்று தான் அப்போது மக்கள் பார்த்தார்கள். ஆனால், கொள்ளைக்காரர்கள் மனிதர்கள் இல்லையா? ராம் பாபு கதாரியா சூழ்நிலை காரணமாகவே குற்ற உலகிற்குத் தள்ளப்பட்டார். அவருடைய சூழ்நிலையை நான் மிக நெருக்கமாக அறிவேன். சமுதாயத்தில் உள்ள சில மனிதர்கள் அவரை அந்த அளவிற்குத் துன்புறுத்தினார்கள்.
அதன் காரணமாகவே அவர் கொள்ளைக்காரனாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இல்லையெனில், ராம் பாபு ஒருபோதும் கொள்ளைக்காரனாக வேண்டிய விதி கிடையாது. அவரைப் பற்றிய அனைத்தும் எனக்கு நினைவிருக்கிறது. சிறைச்சாலை முதல் அடர்ந்த காடுகள் வரை நாங்கள் எல்லா இடங்களிலும் சந்தித்திருக்கிறோம். இவ்வாறு லோதி பேசினார்.