

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நூல் வெளியீட்டில் ஒரே பாஜக தலைவராக கேப்டன் அம்ரீந்தர் சிங்(84) கலந்து கொண்டார். பஞ்சாபின் காங்கிரஸ் முதல்வராக இரண்டு முறை பதவி வகித்தவரை மீண்டும் காங்கிரஸுக்கு இழுக்கும் முயற்சி நடைபெற்றது.
பஞ்சாப் மாநிலத்தின் முக்கியத் தலைவராகக் கருதப்படுபவர் கேப்டன் அம்ரீந்தர் சிங். இவர், சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். அப்போது சோனியா காந்திக்கும் அவரது பிள்ளைகளுக்கும் அம்ரீந்தர் சிங் ஏழு பக்கக் கடிதம் எழுதினார்.
அதில், பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து தன்னை நீக்குவதற்கு நள்ளிரவில் சதி நடந்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். அதன் பிறகு அவர் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற சோனியா காந்தியின் நினைவுக் குறிப்பு நூலான ’பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ வெளியீட்டு விழாவில், அவர் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஒரே பாஜக தலைவரான கேப்டன் அமரீந்தர் சிங் இருந்தார். மேடையில் பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தம் குடும்பத்தின் மையப்புள்ளியாக அம்ரீந்தரை பலமுறை குறிப்பிட்டு பேசினார். கேப்டன் அம்ரீந்தர் குறித்து காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி பேசுகையில், “அம்ரீந்தர் சிங்-ஜி இங்கே இருப்பதைக் கண்டேன். என் பெற்றோர் (ராஜீவ் மற்றும் சோனியா) விவாதிப்பதையோ அல்லது கருத்து வேறுபாடு கொள்வதையோ நாங்கள் பார்த்திருக்கிறோம், ஆனால் ஒரே ஒரு முறைதான் அவர்கள் தீவிரமாகச் சண்டையிட்டனர். இதுபோல், அவ்வப்போது நடந்தாலும், அதில் ஒன்றை மட்டுமே உண்மையான ‘சண்டை’ என்று சொல்ல முடியும்.
அது காதலர்களுக்கு இடையே ஏற்படும் சிறு மனஸ்தாபம் போன்ற ஒரு தீவிரமான வாக்குவாதம். இது ஒரு பெரிய தற்செயல் நிகழ்வு. இந்தச் சம்பவம் நடந்தபோது, என் தந்தை அமரிந்தர் சிங்குடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். ‘உங்களுக்கு நினைவிருக்கிறதா?’ என அம்ரீந்தரைப் பார்த்து கேட்டதற்கு அவர் புன்னகைத்தார்.
பாட்டியாலாவின் முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த அம்ரீந்தருக்கு, அவரது பள்ளித் தோழரும் நண்பருமான ராஜீவ் காந்தியுடன் தொடர்பு உள்ளது. ராஜீவ் காந்திதான் அவரை காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வந்தார். சமீபத்தில், இன்ஸ்டாகிராமில் நடந்த ‘என்னிடம் எதையும் கேளுங்கள்’ அமர்வின் போது, ராகுல் காந்தி தனது விருப்பமான அரசியல் தலைவராக அம்ரீந்தரைக் குறிப்பிட்டார்.
தனது குடும்பக் கதையின் மையப் புள்ளியாக கேப்டன் அம்ரீந்தரை சுட்டிக்காட்டினார் ராகுல். ராகுலைப் போல் காங்கிரஸின் இதர சில தலைவர்களும் தமது உரையில் கேப்டன் அம்ரீந்தரைக் குறிப்பிட்டு பேசியிருந்தனர். மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், அம்ரீந்தர் மீண்டும் காங்கிரஸுக்கு வருவதில் தனக்குள்ள ஆர்வத்தை மறைக்கவில்லை.
இருப்பினும், “அவரை எனக்கு நன்றாகத் தெரியும்... அவர் எங்களுடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், அதைத் தாண்டி என்னால் வேறு எதுவும் சொல்ல முடியாது.” என்று கூறினார். மற்றொரு மூத்த தலைவரும் பஞ்சாபைச் சேர்ந்தவருமான அம்பிகா சோனி, இந்த நிகழ்வில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று கூறினார்.
இதன் மீது அவர், ’சோனியா காந்தியுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமான பிணைப்பு கொண்டவர்களே இதில் கலந்துகொண்டனர். அம்ரீந்தர் சிங் பலமுறை கூறியது போல, இந்தக் குடும்பத்துடன் அவருக்கு நெருக்கமான தொடர்பு உள்ளது. எனவே, அவர் அங்கு சென்றது இயல்பான ஒன்றுதான்.” என்று தெரிவித்தார்.
நூல் விழாவில் வெளியான கருத்துகளால், 84 வயதான அம்ரீந்தரிடம், 2027 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அவர் மீண்டும் காங்கிரஸில் சேருவாரா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் செய்தியாளர்களிடம், ’நாங்கள் ஒரு சமூக நிகழ்விற்காக இங்கே வந்துள்ளோம். இதில் அரசியல் விவகாரங்களுக்கு என்ன வேலை?’ என்று கூறி, அதற்கான சூழலை மறுத்துவிட்டார்.
இதன் மீது மேலும் அவர், ‘இந்தக் குடும்பத்தை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். எங்களுக்கிடையே மிகவும் நெருக்கமான உறவு உள்ளது. நான் அவர்களுடன் இணைய வேண்டுமா? என்று யாரும் என்னிடம் கேட்டதில்லை. அவர்களுடனான எனது சந்திப்புகள் முற்றிலும் தனிப்பட்டவை, சமூக ரீதியானவை மட்டுமே. அவர்கள் என்னை இணையுமாறு அழைத்ததும் இல்லை.
இணைய வேண்டாம் என்று அறிவுறுத்தியதும் இல்லை. அழைப்பு அனுப்பப்பட்டதால், கலந்துகொண்டேன். நான் எழுதிய புத்தகங்களை வெளியிட்டபோது, சோனியா காந்தி மூன்று புத்தக வெளியீட்டு விழாக்களில் கலந்துகொண்டார். பல நாடுகளில், அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மக்கள் தனிப்பட்ட முறையில் சமூக உறவுகளைத் தொடர்ந்து பேணி வருகின்றனர்.’ எனக் குறிப்பிட்டார்.
மாநிலங்களவை எம்பியான சோனியாவிற்கும் முன்பாக கேப்டன் அம்ரீந்தர் மூன்று நூல்களை எழுதியிருந்தார். அவற்றில் இடம்பெற்ற முக்கியக் கருத்துக்கள் காங்கிரஸை விமர்சித்திருந்தன. காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, தம் கட்சியின் தவறுகளை மறைக்கிறாரா அல்லது ஒப்புக்கொள்கிறாரா? என்ற கேள்வியை அவை எழுப்புகின்றன.
தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, பஞ்சாபிலும் தனது செல்வாக்கை நிலைநாட்ட முயன்று வருகிறது. அம்ரீந்தர் சமீபத்தில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இதனால் அவர், பாஜக தனது முன்னாள் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளத்துடன் மீண்டும் இணையக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றன.
பாஜகவில் உறுதி: நூல் விழாவில் ராகுல் காந்தி தன்னைப் பற்றி இவ்வளவு நல்ல விஷயங்களைக் கூறியதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார் அம்ரீந்தர் சிங். ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியை அவர்களின் சிறுவயதிலிருந்தே தனக்குத் தெரியும் எனக் குறிப்பிட்டவர், காந்தி குடும்பத்துடனான தனது உறவு தொடரும் எனத் தெரிவித்தார். அதே சமயம் தான் பாஜகவில் உறுதியுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அம்ரீந்தரின் தனிக் கட்சி: காங்கிரஸிலிருந்து அம்ரீந்தரின் விலகலுக்கு பின் 2022 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸிலிருந்து விலகிய கேப்டன். அம்ரீந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் பெயரில் புதிய கட்சி துவக்கி போட்டியிட்டார். இதில் அக்கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.
பிரதமர் மோடி மீது அதிருப்தி: தனது குடும்பத்தின் முன்னாள் சமஸ்தானத்தின் மையப்பகுதியான பாட்டியாலாவில், அம்ரீந்தர்சிங் போட்டியிட்ட தொகுதியிலேயே அவர் தோல்வியடைந்தார். இதன் காரணமாக, கடந்த செப்டம்பர் 2022 இல், அவர் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார். இருப்பினும், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று அவர் பலமுறை குறை கூறி இருப்பது நினைவுகூரத்தக்கது.