

குவாஹாட்டி: அசாம் சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இம்மாநிலத்தில் ஹாட்ரிக் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்ற பாஜக மிக தீவிரமாக உள்ளது.
ஆனால், பாஜகவின் இந்த ஆசைக்கு அதிருப்தி தலைவர்களும், உட்கட்சி பூசலும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளன. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட தலைவர்கள் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அதேபோல், பிரதான கூட்டணிக் கட்சியான அசோம் கண பரிஷத்துடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும், சில தொகுதிகளில் இரு கட்சிகளும் நேரடியாக மோதும் நட்பு ரீதியிலான போட்டி நிலவுவதும் என்டிஏ கூட்டணிக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.
ஹிமந்த பிஸ்வா சர்மா அமைச்சரவையில் அமைச்சராகவும், தற்போதைய எம்எல்ஏ-வாகவும் உள்ள நந்திதா கர்லோசாவுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக காங்கிரஸில் இணைந்து, கடந்த முறை தான் வெற்றி பெற்ற ஹாஃப்லாங் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார்.
அசாம் மாநில பாஜ முன்னாள் துணைத் தலைவர் ஜெயந்த குமார் தாஸ் கட்சியிலிருந்து விலகி, திஸ்பூர் தொகுதியில் சுயேச்சையாகக் களமிறங்கியுள்ளார். இங்கு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பிரத்யுத் பர்தோலாய்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், காடிகோரா தொகுதியின் முன்னாள் பாஜக எம்எல்ஏ அமர் சந்த் ஜெயின், வாய்ப்பு மறுக்கப்பட்டதால் காங்கிரஸில் இணைந்து அதே தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்த முறை முன்னாள் மாநில பாஜக தலைவர் சித்தார்த்த பட்டாச்சார்யா மற்றும் 5 முறை எம்எல்ஏ-வாக இருந்த அதுல் போரா உள்ளிட்ட பல மூத்த தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மூத்த தலைவர்களின் அதிருப்தி மற்றும் அவர்களுக்கு ஆதரவாக திரளும் தொண்டர்களால் பாஜகவின் ஹாட்ரிக் வெற்றிக் கனவு நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.
இதுகுறித்து பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் ரூபம் கோஸ்வாமி கூறுகையில், “பாஜ ஒரு பெரிய கட்சி. ஒவ்வொரு தொகுதியிலும் பல தலைவர்கள் உள்ளனர். வாய்ப்பு மறுக்கப்படும்போது ஏமாற்றம் ஏற்படுவது இயல்பு. ஆனால் சுயேச்சையாகப் போட்டியிடுபவர்கள் தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து மனுக்களைத் திரும்பப் பெறுவார்கள்” என நம்பிக்கை தெரிவித்தார்.