

புதுடெல்லி: “பாஜக தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசுகள் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கைவிட்டுவிட்டது. அவை கோடீஸ்வரர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,“நாடு முழுவதும் ‘ஊழல்’ ஜனதா கட்சியின் இரட்டை இன்ஜின் அரசாங்கங்கள் மக்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டன. ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஆணவம் என்ற விஷம் பாஜக-வின் அரசியலில் மேலிருந்து கீழ் வரை பரவியுள்ளது. அவர்களின் அமைப்பில், ஏழைகள், ஆதரவற்றவர்கள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமே, மேலும் 'வளர்ச்சி' என்ற பெயரில் ஒரு மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல் இயங்கி வருகிறது.
உத்தராகண்டில் அங்கிதா பண்டாரி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. ஆனால் அந்த சம்பவத்தில் இன்று ஒரே கேள்விதான் எழுகிறது: அதிகாரத்தில் இருப்பவர்களால் எந்த பாஜக விஐபி பாதுகாக்கப்படுகிறார்? சட்டம் எப்போது அனைவருக்கும் சமமாக இருக்கும்?.
உத்தரபிரதேசத்தின் உன்னாவ் வழக்கில், பாஜகவின் அதிகார ஆணவத்தால் குற்றவாளிகள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டனர் என்பதையும், பாதிக்கப்பட்டவர் நீதிக்காக எவ்வளவு விலை கொடுக்க வேண்டியிருந்தது என்பதையும் முழு நாடும் பார்த்தது. இந்தூரில் விஷம் கலந்த நீரைக் குடித்ததால் ஏற்பட்ட உயிரிழப்புகள், குஜராத் - ஹரியானா - டெல்லியில் அசுத்தமான நீர் விநியோகம் குறித்த குற்றச்சாட்டுகள் உள்ளன. நோய் குறித்த அச்சம் எல்லா இடங்களிலும் சூழ்ந்துள்ளது.
ராஜஸ்தானின் ஆரவல்லி விவகாரம் அல்லது எந்த இயற்கை வளங்களாக இருந்தாலும், கோடீஸ்வரர்களின் பேராசை மற்றும் சுயநலத்துக்காக விதிகள் காலில் போட்டு மிதிக்கப்பட்டன. மலைகள் துண்டாக்கப்படுகின்றன, காடுகள் அழிக்கப்படுகின்றன, அதற்குப் பதிலாக மக்களுக்குக் கிடைப்பது: தூசி, மாசுபாடு மற்றும் பேரழிவுகள் தான்.
இருமல் மருந்துகளால் குழந்தைகள் இறப்பது, அரசு மருத்துவமனைகளில் எலிகள் பச்சிளங்குழந்தைகளைக் கொல்வது, அரசுப் பள்ளிகளின் கூரைகள் இடிந்து விழுவது, இவை 'அலட்சியம்' அல்ல, ஊழலின் நேரடி விளைவுகளே. பாலங்கள் இடிந்து விழுகின்றன, சாலைகள் குண்டும் குழியுமாகின்றன, ரயில் விபத்துக்களில் குடும்பங்கள் அழிகின்றன, ஒவ்வொரு முறையும் பாஜக அரசாங்கம் செய்வதெல்லாம், புகைப்படங்களுக்குப் போஸ் கொடுப்பது, ட்வீட் செய்வது மற்றும் இழப்பீடு வழங்கும் சடங்கை நிறைவேற்றுவது.
மோடிஜியின் 'இரட்டை இன்ஜின்' அரசாங்கம் கோடீஸ்வரர்களுக்காக மட்டுமே இயங்குகிறது. சாதாரண இந்திய மக்களுக்கு, ஊழல் நிறைந்த இந்த இரட்டை இன்ஜின் அரசாங்கம் என்பது வளர்ச்சி அல்ல, அது பேரழிவின் வேகம்; ஒவ்வொரு நாளும் ஒருவரின் வாழ்க்கையை நசுக்கிக் கொண்டிருக்கிறது’ என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.